பக்கம்:தமிழக வரலாறு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

127


பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய இலக்கியங்கள் தாம் மிக அதிகமாகக் காணப்பெறுகின்றன. சங்க இலக்கியத்திலேயே நீண்ட பாடலாய் அமைந்த மதுரைக் காஞ்சி அவனைப் பற்றியும் அவன் தலைநகரைப் பற்றியும் நன்கு விளக்குகின்றது. இனி, அவனே பாடிய சில பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவன் சிறந்த வீரனாய் இருந்ததோடு பெரும்புலவனாயும் இருந்தான். அத்துடன் பல புலவர்களையும் ஆதரித்தான்; புலவர் வாய்ச் சொல்லாகிய புகழுக்கும் ஏங்கி நின்றான். அவன் கூறிய ஒரு வஞ்சினப் பாட்டில்,

‘மாற்றாரை,—ஒருங்கு அகப் படேஎ னாயின்
மாங்குடி மருதன் தலைவ னாகப்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை’ (புறம். 72)

என்றே வஞ்சினங் கூறிப் புலவர் மாட்டுத் தான் கொண்ட உயர்ந்த எண்ணத்தைப் புலப்படுத்துகின்றான். அவன் பல அரசர்களை இளமையிலே புறங்கண்டு வெற்றி கொண்ட வீரன். பாண்டிய மரபில் கடைச் சங்க காலத்தில் அவனே சிறந்தவனாகக் காணப்படினும் இன்னும் சில பாண்டியரும் வாழ்ந்திருந்தனர். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி காலத்திலே தான் திருக்குறள் அரங்கேற்றப் பெற்றதென்றும், அவனே கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த இறுதிப் பாண்டியன் என்றும், அவனுடன் சங்கம் அழிந்தது என்றும் கூறுவர். பின்வரும் சிலப்பதிகார மணிமேகலை காலத்தில் சங்கத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றும் இன்மையின் அக்கூற்றும் பொருத்தமானதே. சில பாண்டிய மன்னரும் இரண்டொரு பட்டத்தரசியரும் புறநானூற்றால் நமக்கு அறிமுகமாகின்றார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் அதிகம் அறிய வாய்ப்பின்மையின் மேலே செல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/129&oldid=1358352" இலிருந்து மீள்விக்கப்பட்டது