பக்கம்:தமிழக வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

135


அவ்வந்நிலத்தில் பெறும் பொருள்களுக்கு ஒப்ப உணவு கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள். நிலத்தில் இவ்வாறு இயல்பாக அமையும் பொருள்களைக் கருப்பொருள்கள் என்று கூறி அவற்றை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் இலக்கண நூலோர். ஐவகை நிலத்தில் வாழ்வோர் வாழ்க்கை முறைகள் தனிப்பட்டனவாய் இருந்தாலும், அவர்தம் கூட்டு வாழ்க்கை ஒன்றிய தமிழ்ச்சமுதாய வாழ்வாகவே அமைந்திருந்தது மக்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, ‘வாழ்வு என்பது கூடி வாழ்தலே’ என்ற அடிப்படையில் நிலைத்து நின்று திருந்திய செம்மை நெறியிலே வாழ்ந்தார்கள் என்பது மிகவும் பொருந்துவதாகும்.

குறிஞ்சி

குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமுமாகும். அங்கே வாழும் மக்கள் அந்நிலத்தில் கிடைக்கும் தேன், தினை, கிழங்கு முதலியவற்றை உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். தினை விளைத்துப் பெருக்கி, மாவாக்கி, தேன் எடுத்துக் கொணர்ந்து தினைமாவுடன் சேர்த்து உண்பதோடு வந்த விருந்தினருக்கும் அதை உணவாகக் கொடுத்து ஆதரித்தார்கள். அந்நிலத்து மக்கள் குறிஞ்சிப் பண்ணைப்பாடுவார்கள் தினைப்புனம் காத்தலும், விருந்தோம்பலும் பெண்டிர்தம் செயல்களாய் அமைந்தன. மலை வாழ் வேடுவர் வேட்டையாடுவதும் மலை வாழ் யானைகளைப் பழக்குவதும், மலையில் விளையும் மணப் பொருள்களைக் கொணர்வதும் செயலாகக் கொண்டனர். குறிஞ்சி மலரைத் தொடுத்து அதன் வழிக் காதல் காட்டியும் சூட்டியும் விளையாடும் அவர்தம் வாழ்வே தனிச் சிறப்புடையது. அருவியாடியும், அகன்சுனை குடைந்தும், குறிஞ்சிப்பண்பாடியும் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/137&oldid=1358374" இலிருந்து மீள்விக்கப்பட்டது