பக்கம்:தமிழக வரலாறு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமுக வாழ்வு

137


மண்ணையும் கொண்டுவந்து சமநிலத்தில் விட்டுக் கடல் நோக்கிச் செல்லுமன்றோ! அந்தச் சமநிலமாகிய விளை நிலமே மருத நிலமாகியது; விளைவுக்கு ஏற்ற நிலமாகியது. அதில் கை வருந்திப்பாடு படுவோரே மருதநில மக்கள். அவர்கள் இனிய மருதப் பண்ணைப் பாடுவார்கள். மழை பெய்யும் காலமறிந்து நீரைச் சேர்த்து நெல் விளைத்துகாலத்தில் செய்யவேண்டுவன செய்து, விளைத்து—அறுத்து, அதைத் தமக்கென வைத்துக் கொள்ளாது மற்றவருக்கும் வழங்கித் தாமும் உண்ணும் நல்வாழ்வே மருதநில மக்களுடையது. பரந்த வாழை இலையைப் பரப்பி, வெண்ணெல் அரிசிச் சோறு இட்டு, சாறும் மோரும் வார்த்து வந்தவர்களை உண்பிக்கும் விருந்து புரக்கும் மனப்பான்மை அவர்களுடையது. அவர்கள் காலம் கணித்து மழை அறிந்து வயலில் செயல்படுவார்கள். அவர்களுக்கு வீட்டு மிருகங்கள் உதவி செய்யும். மாடு அவர்கள் செல்வம். செந்நெல்லும் வெண்ணெல்லும் அவர்களுடைய விளை பொருள்கள். அவர்களை வேளாளர் என்றும் அவர்கள் செயலை வேளாண்மை என்றும் வழங்கினர்.

நெய்தல்:

நெய்தல் நில மக்கள் கடல் வளத்தைக் கண்டவர்கள். வாழ்வைத் துச்சமென எண்ணி, ஆழ்கடலுள் சென்று, மீனும் முத்தும் பிற பொருள்களும் கொண்டு வந்து கரையில் குவித்து, நாட்டுச் செல்வத்தை வளர்த்தவர்கள் அப்பரதவர்கள். பழங்காலத் தமிழகத்துக் கடற்கரைப் பட்டினங்கள் அவர்தம் செல்வ வளத்தாலேயே சிறப்புற்றன எனலாம். உரோமாபுரி வரையில் தமிழகத்தின் பெருமை பரவியதென்றால், அதற்குக் காரணம் அவர்கள் கண்டெடுத்த முத்தும் பவளமுமேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/139&oldid=1375666" இலிருந்து மீள்விக்கப்பட்டது