பக்கம்:தமிழக வரலாறு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

153


சங்கமே நன்கு தொழிற்பட்டுத் தென்னாடு தாண்டி, ஈழம் வரையில் புத்த சமயத்தைப் பரப்பியது எனலாம். அந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலும் வடவிந்தியாவில் புத்தருக்கும் வைதிக ஆரியருக்கும் அடிக்கடி போரும் பிணக்கும் நடந்து கொண்டேதான் இருந்தன. இந்திய வரலாற்றுத் தெளிவு ஏற்பட்ட அந்தக்காலத்தே இந்தச் சமயப் போராட்டந்தான் நன்கு கண்களுக்குப் புலனாகின்றது. புத்த சமயத்தை ஒட்டி வடநாட்டில் சமணமும் கால்கொள்ளத் தொடங்கியது. அசோகர் போன்ற பேரரசர்சளும் அந்தச் சமயங்கள் வளரப் பாடுபட்டனர். எனவே, வைதிக சமயம் அவற்றின் முன் ஆற்றா நிலை எய்தியது. அந்தக் காலத்திலேதான் அது தெற்கு நோக்கி வாழ வழி வகுத்திருக்கும், வழியெலாம் கடந்து பின் தென்கோடியில் உள்ள தமிழகத்தும் அது பரவியது, என்றாலும், அன்றைய தமிழர் தம் உயரிய வாழ்வில் அதனால் புகுந்து வாழ்ந்து நிலை பெற முடியவில்லை. கூடியவரையில் தன் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வடக்கே தோன்றிய பெளத்தம், சமணம் என்ற இரண்டும் அதை வெகுவேகமாகத் துரத்திக்கொண்ட வந்து தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தன. அந்தக் காலந்தான் தமிழ் நாட்டிலும் கடைச்சங்கம் அழிவுற்று, கரிகாலன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் போன்ற சிறந்த மன்னர் வாழ்ந்து மறைந்தபின் தக்க தலைசான்ற மன்னர் இல்லா நிலை ஏற்பட்ட காலமாய் அமைந்தது. தடுத்து நிறுத்தத் தக்கவர் இல்லாத காலமாதலால் வடக்கிலிருந்து வந்த இந்த வைதிக சமயமும், சமணமும், பெளத்தமும் தமிழ் நாட்டில் பரவலாயின. அவை பரவத் தொடங்கிய அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/155&oldid=1358085" இலிருந்து மீள்விக்கப்பட்டது