பக்கம்:தமிழக வரலாறு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

157


அறிகின்றோம். அங்கு நடந்த இந்திர விழாவையும், அதன் வழி தமிழ் மக்கள் எவ்வாறு விழாக்கள் கொண்டாடினார்கள் என்பதையும் காணும்போது தமிழ் நாட்டில் ஒரு புதிய மாற்றம் தோன்றியதை உணர்கின்றோம், ஆண்டுக்கு ஒருமுறை ஒரிடத்தில் அனைவரும் கூடி, ஆடிப் பாடி,

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி’

விழாக்கொண்டாடும்முறை ஏற்பட்டதை அறிகின்றோம். இவ்விழாவைப் பற்றி மணிமேகலை இன்னும் சற்று விளக்கமாகவே காட்டுகின்றது. மேலும், நகர் அகநகர் என்றும் புறநகர் என்று இருபிரிவாகப் பிரிக்கப்பட்டு அவ்வவற்றுள் வாழ்ந்த மக்கள் நிலையினைப் புகாரிலும் மதுரையிலும் நம்மை நிறுத்தி இளங்கோவடிகள் காட்டு கின்றார்;அது போன்றே நாடும் அகநாடு என்றும் புறநாடு என்றும் அமைந்தது என்பதைச் செங்குட்டுவனை முன்னிறுத்திக் காட்டுகின்றார். சேர நாட்டுக்கு அகநாடாவது, மலைக்கும் கடலுக்கும் உட்பட்ட இக்கால மலையாளப் பகுதியேயாகும்; புறநாடு என்பது, இன்றைய கொங்கு நாட்டுப்பகுதிகளில் சில சேர்ந்ததாய் இருந்திருக்கும், கண்ணகி மதுரையை விட்டுப் பாண்டிய நாடு தாண்டி, சேரர் தம் புறநாட்டு எல்லையெல்லாம் கடந்து, அவர்தம் மலைதாண்டி அகநாட்டு எல்லையில் புகுந்தாள் என்பதை வானவன் மாதேவி வாயிலாக, ‘நம் அகநாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’ என்று இளங்கோவடிகள் காட்டுவதால் அறியலாம், இப்படி நாடும் நகரும் காப்பிய காலத்திலே நன்கு சிறத்திருந்தமை இரண்டு காப்பியங்களாலும் அறியலாம். காஞ்சியின் அகன்ற தெருக்களையும் பிற சிறப்புக்களையும் சாந்தனார் எடுத்துக் காட்டுகின்றார். எனவே சங்க காலத்தில் சிறந்திருந்த தமிழ்நாட்டுப் பேரூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/159&oldid=1358104" இலிருந்து மீள்விக்கப்பட்டது