பக்கம்:தமிழக வரலாறு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

159


அதில் காணலாம். மேலும், விழா முதலிய நல்ல நாட்களில் சிறைக் கதவும் திறந்து கைதிகளை விடுவிக்கும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகின்றது. அரசன் நீதி கூறவேண்டிய நெறி இத்தகைய தென்பதும், மன்னவன் தவறின் தன்னை மாயத்துக்கொள்வதன்றி வேறு வழி இல்லை என்பதும் தெளிவாகின்றன. உதயகுமரன் தந்தை தன் மனைவி சொற்கேட்டு மணிமேகலையைப் பலவகையில் துன்புறுத்திய பின், உண்மை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் இரண்டாவது அறமே. மேலும், அவன் மகன் இறந்தமைக்கு வருந்தாது, தான் தர வேண்டிய தண்டனையை மணிமேகலையே செய்வித்தமைதான் அவனை வருந்திற்றென்று கூறுவது நோக்கற்பாலது. வானவன் மாதேவியார் அரசனோடு ஒருங்கிருந்து அனைவரும் அறிந்து கூறாத உண்மையைத் தாம் ஆய்ந்துணர்ந்து கண்ணகிக்குக் கோயில் எடுக்க வேண்டுமென்று கூறியது மகளிர் அரசியலில் பங்கு கொண்ட உண்மையைத் தெளிவு படுத்துகின்றது. இப்படிப் பல்வேறு வகையில் அரசர் வாழ்வையும், அரசியல் முறையையும் இருபெருங் காப்பியங்களும் நன்கு காட்டுகின்றன.

வாழ்க்கை முறை-மக்கள்:

இனி, மக்கள் வாழ்வில் சில பகுதிகளைக் காணலாம். நகர அமைப்புக்களும் வாணிபமும் பிற இயல்புகளும் பெருமாற்றம் உறாமையின் மக்கள் சங்ககாலம் போன்றே நன்றாக வாழ்ந்தார்கள். என்றாலும், அவர்களிடையில் தமிழரல்லாதாரது பழக்க வழக்கங்களும் சமயநெறிகளும் பிறவும் கால்கொள்ள ஆரம்பித்தன. சங்க இலக்கியங்களில் பரத்தமை வாழ்வு பேசப்படினும் அந்தப் பரத்தை அரங்கேறி ஆடி மற்றவரை மயக்கி, ‘மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ எனத் தெருவில் நின்று விலை பேசியதாக நாம் காணவில்லை. ஆயினும் சிலப்பதிகாரத் தொடக்கத்திலே அக்காட்சி உருவாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/161&oldid=1358106" இலிருந்து மீள்விக்கப்பட்டது