பக்கம்:தமிழக வரலாறு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழக வரலாறு


‘செஞ்சடை வானவன் அருளின் தோன்றி
வஞ்சி விளங்கிய வானவன்’

என்றும்,

‘ஆனேறு உயர்த்தோன் அருளினில் தோன்றி
மாநிலம் காத்த மன்னவன்,’

என்றும் கூறி அவன் சைவனாதலை மெய்ப்பிக்கின்றார். இவர் புத்த சமயத்தவராகிய சாத்தனாருடன் நெருங்கிய நட்பாளராய் இருக்கின்றார். எனவே, வைதிக சமய மாடலனும், சைவ சமயச் செங்குட்டுவனும், சமண சமய இளங்கோவும், புத்த சமயச் சாத்தனாரும் ஒரு சேரக் கண்ணகி விழாவில் கலந்துகொண்டனர் என்பது தேற்றம். இந்நிகழ்ச்சிகளின் வழி ஆராயின், சமயங்கள் பல இருந்த போதிலும் அவை தம்முள்ளே மாறுபடாது ஒன்றிக்கலந்து வாழ்ந்தன என்பது நன்கு விளக்கமாகிறது.

சமயக் காழ்ப்பு:

என்றாலும் சாத்தனாரது மணிமேகலையை ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் சமய மாறுபாட்டினுக்கு வித்திட்டாரோ என்று எண்ணத் தோன்றும். தம் சமயமே சிறந்தது என்றும் பிற சமயங்கள் தாழ்ந்தன வென்றும் காட்டும் அவர் காதை ஒன்று அவ்வேறுபாட்டு எண்ணத்தை வளர்ப்பதன்றோ! எனவே, இந்த மணிமேகலையின் தோற்றக் காலமே தமிழ் நாட்டில் சமய மாறுபட்டு விதையை ஊன்றிய காலம் எனத் திட்டமாகக் கூறலாம். வேறுபாடற்று ஒன்றிய சமய நெறியில் ஒரே சமுதாயமாய் வாழ்ந்த தமிழர், இக்காப்பிய காலத்திலேதான் சமயத்தாலும், பிற வழக்கங்களாலும் வேறுபட்டனர் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/164&oldid=1358110" இலிருந்து மீள்விக்கப்பட்டது