பக்கம்:தமிழக வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

167


குல மகளிர் அடைக்கலப் பொருளை ஒம்பும் சிறப்பினை விளக்கிக் காட்டுகின்றனவன்றோ! சங்ககாலத்தில் முல்லைப்பாட்டிலும் பிற முல்லைத்தினைப் பாடல்களிலும் அவர்தம் காதல் வாழ்வையும், களிமகிழ் சிறப்புகளையும் கண்ட நமக்கு, இவ்வடைக்கலப் பொருளை ஒம்பும் பண்பாடு ஈண்டுப் புதிதாக விளக்க முறுகின்றது. மேலும், கண்ணகியின் துயர் கண்டு மதுரைமாநகர மக்கள் பெற்ற நிலையும் பிறவும் பொதுவாக இன்றும் ஏதிலார் துன்பங்கண்டு மக்கள் இரங்கும் நிலையினை ஒத்துள்ளமை அறியலாம். காட்டில் வேட்டுவ மக்கள் ஆடிய வேனில் விளையாட்டும், மலைவாழ் மக்கள் ஆடிய குன்றக் குரவையும் தமிழ் இலக்கியத்தில் புதுப்புதுப் பாடல்களை உருவாக்கும் நிலையில் அமைந்துள்ளன. இன்னும் விருந்தினரை ஒம்பும் சிறப்பும், பிச்சை இடுதலின் பெருமையும், பிற நல்இயல்புகளும் மணிமேகலையில் சிறப்பிக்கப் பெறுகின்றன. இக்காப்பிய காலத்தில் சமயத்தாலும், பிற பழக்க வழக்கங்களாலும் தமிழ் நாட்டு மக்கள் சிற்சில வழிகளில் மாறுபட்டு நின்றார்கள். என்றாலும், பொதுவில் அவர்கள் ஒன்றிய உணர்வினராகவே வாழ்ந்துவந்தார்கள் எனலாம். வயதான பிறகும் ஆண்டவனை வழிபட்டு அறத்துறையில் நில்லாது அரச போகத்திலிருந்து மாற்றாரை வெல்ல நினைப்பது தகாது என்பதை மாடலன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தும் வகையினை நாம் காண்கிறோம். நாளும் கோளும் நல்லனவும் அல்லனவும் செய்யும் என்பதைக் காட்டும் நிகழ்ச்சிகளும் மக்கள் வாழ்வில் இடம் பெற்று உள்ளன. இவ்வாறு காப்பிய காலத்தில் மக்கள் சமுதாய வாழ்வு சங்ககாலச் சமுதாய வாழ்வினைக் காட்டிலும் சற்று மாறுபட்டே நின்றதென்பது தெளிவாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/169&oldid=1358122" இலிருந்து மீள்விக்கப்பட்டது