பக்கம்:தமிழக வரலாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பதிப்பின் முன்னுரை


நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இளங்கலை முதுகலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்திய காலம் சென்னை பல்கலைக்கழகப் பாடநூற்குழுவில் இடம் பெற்றிருந்த காலம். தமிழக வரலாறு பாடமாக அமைக்கத் திட்டமிட்டு, பாடதிட்டத்தையும் அமைத்து. அதற்கேற்ப இந்தத் ‘தமிழக வரலாற்’றினைச் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன் எழுதினேன். பின் 1979வரை அடுத்து மூன்று பதிப்புகள் (மொத்தம் நான்கு) வெளி வந்தன. அப்போது இதே அமைப்பில் பலர் நூல்கள் எழுதி வெளியிட்டமையின், இந்த நூல் இல்லையாயினும் மாணவர் வேறு நூல்களைப் பயில வாய்ப்பு உள்ளமையின் இதன் மறுபதிப்பினை வெளியிடவில்லை எனினும் தற்போது அவை ஒன்றும் கிடைக்காமையின், பல்கலைக் கழக, கல்லூரி ஆசிரியர் இந்நூலை வெளியிட வேண்டும் என்றனர். எனவே இந்தப்பதிப்பு இன்று வெளிவருகிறது.

பல ஆண்டுகள் இடைவெளியில் தமிழ் நாட்டு வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள் உண்டாயின? சமுதாயம், கல்வி, கலை இவை வளர வேண்டிய வகையில், அமைப்பில், தெளிவில் வளரவில்லை. அரசியலிலும் புதுப் புது வகையான மாற்றங்கள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்துள்ளன. ‘நல்லனவும் அல்லனவும்’ மக்காளாட்சியில் இன்று கலந்து மலிந்துள்ளன. அவற்றை காட்டுயது வரலாற்று ஆசிரியன் கடமையானாலும், இன்றும் எழுத ஓய்வு இல்லர் நிலையிலும் வேறுபிற காரணங்களாலும் அவற்றை நான் தொடர்ந்து பழையபடியே அச்சிட்டுள்ளேன். கடைசியில் இரண்டொரு பக்கத்தில் மாற்றம் பற்றிக் குறிப்பிட்டேன். அடுத்து விரைவில் தொடர்ந்து கடந்த அரை நூற்றாண்டு பற்றி ‘விடுதலைக்குப்பின் தமிழகம்’ என்ற தலைப்பில் முடியுமானால் ஓய்வும் வாய்ப்பும் அமையின் வெளியிட எண்ணியுள்ளேன்.

இந்நூலை அச்சிடுங்கால் பிழைகளை ஒப்பு நோக்கித் திருத்தி உதவிய சென்னை, பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் வளவன் அவர்களுக்கு வாழ்த்து.

தமிழ்க்கலை இல்லம்,
சென்னை-30.
15-10-95

பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/18&oldid=1358028" இலிருந்து மீள்விக்கப்பட்டது