பக்கம்:தமிழக வரலாறு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XI. காஞ்சியில் பல்லவர்

பல்லவர் காலம்:

தமிழக வரலாற்றின் இருண்ட காலத்திலே தமிழ் நாட்டில் இன்னார் எங்கிருந்து வந்தவர் என்று அறிந்துகொள்ளக் கூடாவகையில் குடியேறிய பல்வேறு அரச பரம்பரையினரோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் போராடி இறுதியில் வெற்றிபெற்று, காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் தமிழக வரலாற்றையே செப்பம் செய்துவிட்டார்கள் எனலாம். பல்லவர்கள் சிறக்க வாழ்ந்த காலமாகிய கி பி. 600 முதல் சுமார் 900 வரை, தமிழ்நாடு பல வகையில் சிறந்தோங்கி நின்றது எனலாம். வரலாற்றைத் திட்டமாக வரையறுக்கச் சிறந்த கருவிகளாய் உள்ள கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சாசனங்கள். கலைநிலையங்கள், இலக்கியங்கள் போன்ற பல சாதனங்கள் இக்காலத்தில் உருவாயின. இக்காலத்து இலக்கியங்கள் சங்க காலத்து இலக்கியங்களைக் காட்டிலும் வேறுபட்டனவேயாம். அவை நாட்டை வரலாற்றின் வழியும் வாழ்க்கை நெறி வழியும் எடுத்துக் காட்டுபவைகளாய் அமைந்து விட்டன. அவற்றைப் போன்றே கற்கோயில்களும், குகைக்கோயில்களும், அவற்றில் தீட்டப்பெற்ற ஓவியங்களும் சிற்பங்களும் என்றென்றும் தமிழ் நாட்டில் நிலைத்த சின்னங்களாய் நின்றுவிட்டன. அக்காலத்தில் வளர்க்கப்பெற்ற பல்வேறு கலைகளும்-இசையும் பிறவும் காவியங்களும், சமய நெறிகளும் தமிழர்தம் வாழ்வில் ஒன்றி, அன்று மட்டுமன்றி இன்றளவும் அவர்களைப் பின்னிப் பிணைத்தே வாழ்கின்றன. எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/188&oldid=1358548" இலிருந்து மீள்விக்கப்பட்டது