பக்கம்:தமிழக வரலாறு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. எது வரலாறு

வரலாற்று எல்லை:

உலகம் தோன்றி எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்துவிட்டன. விஞ்ஞானிகள் எவ்வளவோ முயன்றும் இந்தப் பூமியின் ஆயுளைத் திட்டவட்டமாக வரையறுக்க அஞ்சுகின்றார்கள்; இந்த பூமி சூரியனிடமிருந்து தோன்றிய ஒரு அணு என்றும், சூரிய சுழற்சியிலிருந்து சிதறித் தனியாய் நின்றுவிட்டதென்றும் கூறுவார்கள். எனவே, சூரியன் ஆயுட்காலத்தையும் அதற்கு முன்னமே யாண்டும் பரந்து நின்ற இந்த அண்டக்கோளத்தின்[1] ஆயுளையும் கணித்தறிதல் எளிதன்று இத்தகைய நீண்ட அண்டகோளத்தின் ஆயுட்காலத்தில் மனிதனின் ஆயுட்காலம் மிகமிகக் குறுகியது. அதைப் போன்றே பரந்த அண்ட கோளத்து எல்லையில் இப்பூமியின் எல்லை ஒரு சிறு அணு போன்றது. எனினும், இந்த உலகில் வாழ்கின்ற மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் இயல்புகளைக் காணத்தக்க வகையில் வளர்ந்துகொண்டு வருகின்றான்.

எது வரலாறு?

மனிதன் காண விரும்பும் நெறிகள் பல. அவன் விஞ்ஞானத்தின் துணைகொண்டு விண்ணையும் மண்ணையும் அளக்க விரும்புகின்றான்; மெஞ்ஞான வழியில் உள்ளுணர்வு பெற்று உயர வழி தேடுகின்றான்; சென்ற காலத்தின் அருமையை எல்லாம் எண்ணிப் பார்க்கின்றான்;


  1. Universe
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/19&oldid=1376448" இலிருந்து மீள்விக்கப்பட்டது