பக்கம்:தமிழக வரலாறு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழக வரலாறு


தெற்கே பாண்டியரும் ஒரு சேரச் சைவத்தை நிலை நாட்டிச் சமணத்தை அழித்து வெற்றி கண்டனர். அதன் பின் சமணம் தமிழ்நாட்டில் தலைதூக்கவே இல்லை. சைவம் நிலைத்து வாழ்கின்றது.

பாண்டியன் நெடுமாறனுக்கும் நரசிங்கனுக்கும் போர்கள் நடைபெற்றன. நரசிம்மன் செயல்களைப் பற்றியெல்லாம் கூரம் சாசனம் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. பரஞ்சோதியார் புலிகேசியை வெல்ல வாதாபி நோக்கி வடக்கே சென்ற அதே வேளையில், நரசிம்மன் தெற்கே பாண்டியருடன் போரிட்டான் போலும்! இலங்கையில் அரசு முறைபற்றி வந்த குழப்பம் காரணமாகத் தன்னை நாடி வந்த மானவர்மனுக்கு உதவி செய்யவே ஈழநாட்டின் மேல் இருமுறை போர் தொடுத்து வெற்றி கண்டான் அவன். அவனுடைய வெற்றியைக் கல்வெட் டுக்கள் இராமனது இலங்கை வெற்றியோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றன.[1]

அவன் காலத்தில்தான் சிறந்த சீன யாத்திரிகனான யுவான்சுவாங் காஞ்சிக்கு வந்தான். அவன் ஹர்ஷனிடம் சிலகாலம் தங்கி, ‘நாலந்தா’ முதலிய பல்கலைக்கழகங்களைக் கண்டவன். நாலந்தாவில் இருந்த சிறந்த பேராசிரியராகிய தர்மபாலர் காஞ்சியைச் சேர்ந்தவர். காஞ்சியின் புகழ் அன்று சீனம்வரையில் பரவி இருந்தது. எனவே, வடநாடு கண்ட யுவான் சுவாங் ‘திராவிட’ நாடாகிய தென்னாட்டையும் காண வந்தான்; காஞ்சியில் தங்கி அதன் வளம் கண்டு புகழ்ந்து எழுதியுள்ளான். சீனமொழியில் காஞ்சி-


  1. S.I.I. Vol. II, p. 343
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/196&oldid=1358498" இலிருந்து மீள்விக்கப்பட்டது