பக்கம்:தமிழக வரலாறு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

195


யைப் பற்றியும் திராவிட நாட்டைப்பற்றியும் அன்று எழுதிய குறிப்பால் இந்நாட்டு நிலம் செழிப்பாய் இருந்ததென்றும், மக்கள் அஞ்சாநெஞ்சுடன் அறம் வளர்த்தவர் என்றும், பல பெளத்த மடங்களும் சமண சைவ வைணவக் கோயில்களும் காஞ்சியில் இருந்தன வென்றும் அறிகின்றோம். அவன் பாண்டிநாட்டையும் கண்டதாகக் குறிக்கின்றான். அக்காலத்திற்கு முன் சிறந்திருந்து அழிந்த பல பெளத்த மடங்களின் சிதைவுகளை அவன் கண்டு தன் குறிப்பில் தீட்டியுள்ளான். காஞ்சி கடற்கரையை நோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் எனக் குறிக்கின்றான். இப்படி நெடுந்தொலைவிலிருந்து வந்து எழுதிய சீனயாத்திரிகன் குறிப்பினால் நாம் பழந்தமிழ் நாட்டுச் சிறப்பை அறிய வாய்ப்பு உண்டாவது கண்டு மகிழ்ச்சியுற வேண்டுமன்றோ!

இனி, நரசிம்மன் குகைக்கோயில்களைப்பற்றிக் காண்போம். அவனும் தந்தையைப் போன்றே பல இடங்களில் குகைக்கோயில்களைக் குடைந்தவனாவன். அவன் கோயில்களில் ஓவிய வேலைப்பாடுகள் மிக்கிருந்தன. தூண்கள் பல வகை அழகுகள் பொலியச் செதுக்கப்பெற்றன. தூண்களின் அடியில் சிங்கங்கள் தூண்களைத் தாங்குவது போன்று செதுக்கப்பெற்றுள்ளன அவன் நாமக்கல் மலையடிவாரத்தில் நரசிங்கப்பெருமாள் கோயிலைக் குடைந்தான் திருவெள்ளறையில் முடியாமல் நிற்கும் கோயில் அவன் காலத்தது என்பர். இன்னும், சில ஊர்களிலும் அவன் கோயில்கள் உள்ளன எனினும், மாமல்லபுரத்துக் கோயில்களின் வழி அவன் என்றும் வாழ்பவனாகி விட்டான் ஊரே அவனது பட்டப் பெயர்களுள் ஒன்றாகிய ‘மாமல்லன்’ என்பதனாலன்றோ வழங்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/197&oldid=1358499" இலிருந்து மீள்விக்கப்பட்டது