பக்கம்:தமிழக வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழக வரலாறு


வருங்காலத்தின் நன்மை தீமைகளைக் கணக்கிட முயல்கின்றான். இத்துறைகளில் அவன் ஆராய்ச்சி செல்லும் போது பலப்பல உண்மைகள் வெளியாகின்றன. அவ்வாறு வெளியாவதைப் பழங்கால மனிதன் எழுதி வைக்கவில்லை. எழுதி வைக்க அவன் விரும்பி இருந்தாலும் அது முடியாது. ஆனால், இன்றைய மனிதன் தான் கண்ட உண்மைகளை எழுதி வெளியிட்டுப் பலருக்கும் விளங்க வைக்கின்றான். அந்த எழுத்துக்கள் பழங்கால உலக வாழ்வையும், அவ்வுலகில் வாழ்ந்த உயிர்ப் பொருள்களின் வாழ்வையும், மக்களின் வாழ்வையும் விளக்குவனவாயின. அவ்வெழுத்துக்களே வரலாறு எனப்படும்.

வரலாற்று நூல்கள் எழுதிய ஆசிரியர்களுள் சிலர் வரலாறு என்பது அரச பரம்பரையைப் பற்றியும், அவ்வரசர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் செங்கோல் முறை பற்றியும் எழுதுவதே என்று எண்ணிக் கொண்டார்கள். உலகம் தோன்றிய நாள் தொட்டுத் தோன்றி வாழ்ந்து நாடாண்ட அரசர்தம் பரம்பரையைப் பற்றியும், அவர்களது குடும்பத்தில் வாழ்ந்த சுற்றத்தார் பற்றியும், அந்த அரசர்கள் நடத்திய போர்கள் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியுமே பலர் எழுதி வந்தனர். இந்திய நாட்டு வரலாற்றை எடுத்து ஆராய்ந்தவர்கள் எல்லோரும் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா' என்று பொதுவாகச் சிலவற்றைக் கூறிவிட்டு, பிறகு வரலாற்றுக் காலத்துக்கு வரும்போது மெளரிய பரம்பரை தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி வரையில் முறையாக எழுதி முடித்துத் தம் வேலைமுடிந்துவிட்டதாகக் கூறுவர். அதைப் போன்றே தமிழ்நாட்டு வரலாற்றை எழுத நினைக்கின்ற வர்களும் சங்க காலத்துக்கு முன் உள்ள சில அரசர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/20&oldid=1376429" இலிருந்து மீள்விக்கப்பட்டது