பக்கம்:தமிழக வரலாறு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தமிழக வரலாறு



வடபுலத்தாரிடமும் திறை பெற்றவன் எனப்போற்றப்படுகின்றான். ஒரு வேளை பாண்டியன் சில காலம் இவன் கீழ்ச் சிற்றரசனாய் இருந்திருப்பான் போலும்! நந்திக் கலம்பகத்தில் இவன் ‘கழல் நந்தி’ எனச் சிறப்பிக்கப்பெறு வதால் இவனைக் கழற்சிங்கநாயனார் என்பர் சிலர். அது ஆராய்தற்குரியதாகும் இவன் காலத்தில் பாண்டி நாட்டை ஆண்ட வரகுணன், சோழநாடு, நடுநாட்டுப் பகுதிகளைத் தன் கைக்கொண்டு வந்தவாசி வரையிலே வந்துவிட்டான், அவனைத் தெள்ளாற்றில் வெற்றி கண்டே நந்திவர்மன் ‘தொள்ளா றெறிந்த நந்தி’யானான். எனினும், கைவிட்டுச் சென்ற சோழ நாடும் பிற பகுதிகளும் இவன் வசம் திரும்பிவந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை. பல்லவர் பரம்பரையின் கடைசிக் கால எல்லையில் இவன் பேரரசனாய் விளங்கியவன் என்பதை நந்திக்கலம்பகத்தால் அறிகின்றோம்.[1] எனினும் பலர் இவனுக்குத் திறை செலுத்தவில்லை எனவும், அதன் கொடுமை கருதி இவன் இறைவனிடம் முறையிட்டான் எனவும் இவன் காலத்தில் வாழ்ந்த சுந்தரர் தம் தேவாரத்தில் குறிக்கின்றார்.”[2] மற்றும் இம்மன்னன் தம்பியே இவனுக்கு உட்பகையாய் அமைந்தான் என்பது நந்திக் கலம்பக வரலாற்றால் அறியக்கூடியது. பல்லவர் தமிழுக்காக உயிர்விட்ட பரம்பரையினர் என்ற புகழை உலகம் உள்ளளவும் தேடித் தந்து, நந்திவர்மன், தன் வாழ்நாள் எல்லையைக் கடந்தான்.

  1. நந்திக்கலம்பகம், செய், 13, 28.
  2. ‘பல்லவர்க்குத்திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும், பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமானைப் பெற்றாம் அன்றே?’ (சுந்தரர் தேவாரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/204&oldid=1355710" இலிருந்து மீள்விக்கப்பட்டது