பக்கம்:தமிழக வரலாறு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

203


இறுதிப் பல்லவர்

மூன்றாம் நந்திவர்மனுக்கும் பின் சிறந்த பல்லவ மன்னரே இல்லை எனலாம். கி. பி. 900 வரையில் அம் மரபினர் ஆண்டார்கள் என்றாலும், அவர்கள் வலி ஒடுங்கிச் சிற்றரசர் போலவே வாழ்ந்தார்கள் என்று கொள்வது பொருந்தும். நந்திவர்மன் மகனான நிருபதுங்கன் ஆளும்போது பகைவர் பலம் பெற்றனர் பல இடங்களில் இவன் பாண்டியருடன் போரிட்டான். அக்காலத்தில் சீமாறன் சீவல்லபன் (830-835) என்ற பாண்டியன் அரசாண்டான். நிருபதுங்கன் ஈழநாட்டுக்குப் படையெடுத்துச்சென்றான் என அறிகிறோம். இவனுக்குப்பின் அபராஜிதன் சில காலம் அரசாண்டான், இவ்விருவர் காலத்திலும் பல கோயில்கள் கட்டப்பெற்றன. அவற்றுள் ஒன்று திருத்தணிகைக் கோயிலாகும். கோயில் திருப்பணிகளுக்கும் பல்லவ மன்னர் இருவரும் நிறையத்தானம் செய்துள்ளனர். இவ்வாறு பப்பதேவன் காலந் தொடங்கி, சிம்மவிஷ்ணு வரையில் தமிழ்நாட்டு நிலை அறியாமலும் மகேந்திரன் தொடங்கி அபராஜிதன் வரை தமிழ்நாட்டு நிலை அறிந்தும் நலம் புரந்த பல்லவர் மரபு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தன் நிலைகெட்டது எனலாம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இவர்களை அடுத்துத் தஞ்சையைத் தலைநகராக்கிக்கொண்டு விசயாலயன் என்ற மன்னன் வழிச் சோழர் பரம்பரை தலைதூக்கி நின்றது. அக்காலத்தில் உலகே தமிழ் மன்னரைப் போற்றிற்று எனலாம் அவர்களைக் காண்பதன் முன் பல்லவர் கால மக்கள் வாழ்வையும் பிற இயல்புகளையும் காணல் பொருத்தமானதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/205&oldid=1358539" இலிருந்து மீள்விக்கப்பட்டது