பக்கம்:தமிழக வரலாறு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் காலத்துத் தமிழகம்

205


 அழைத்து வந்து ஒருசேர இருந்து உணவுண்டார். என்றும், அப்பரை அப்பூதியார் தெய்வமாகவே போற்றினார் என்றும் காட்டுகின்றார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று யாழ்வாசித்து ஒன்றி இருந்தமையையும் காண்கின்றோம். எனவே இக்காலத்தில் பிறப்பால் சாதி வேறுபாடுகள் தோன்றிவந்தன என்றாலுங் கூட, அவை சமுதாயத்தில் அத்துணை ஆழமாகப் பதியாமல் அனைவரும் கலந்து வாழும் வகையிலே அமைந்திருந்தன எனக் காண்கிறோம். எனவே, சமுதாய அடிப்படை, சாதியால் பிரிக்கும் வகையில் கொடுமையின் உச்சியை அடையவில்லை எனச் சொல்லலாம்.

ஆட்சி முறை

பல்லவர் காலத்தில் நாடு ஆட்சிமுறை கருதிப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கோட்டங்கள். கூற்றங்கள். இராட்டிரங்கள் போன்ற பல பகுதிகள் இருந்தன. அவ்வப்பகுதிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடம் இருந்தது எனலாம். சங்க காலத்தில் இருந்த அரச நெறிக்கும் இக்கால அரச நெறிக்கும் பெரு வேறுபாடு இல்லை. எனினும், நாட்டைப் பகுத்தாளும் முறையில் பலப்பல புதுப்பெயர்கள் இடம்பெறக் காண்கிறோம். அரசர்கள் அரசகாரியங்களைத் தாமே நேரில் கவனித்தலும், பிறரை அதிகாரியாக நியமித்துக் கவனித்தலும் உண்டு. நாட்டு மக்களிடம் அரசர்கள் எளிமையாகப் பழகினார்கள் என அறியலாம். மக்கள் வாழ்க்கை முறைகளை நேரில்கண்டு அவ்வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நூலை மகேந்திரன் எழுதினான் என அறிகிறோம். அந்நூல் வெறுஞ் சமய மாறுபாட்டுக் கருத்தால் எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/207&oldid=1375694" இலிருந்து மீள்விக்கப்பட்டது