பக்கம்:தமிழக வரலாறு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழக வரலாறு


வாக இருக்கமாட்டா. ஆட்சி ஆண்டைக் குறித்தே கல்வெட்டுக்கள் பொறிக்கப் பெறுகின்றமையின், ஒரு வேந்தனது ஆட்சித் தொடக்கத்தில் இருக்கும் மெய்க்கீர்த்தியைக் காட்டிலும் பிற்காலத்தில் உள்ள மெய்க்கீர்த்திகள் நீண்டே இருக்கும். அந்தந்த ஆட்சி ஆண்டிற்குள் அவனவன் செய்துள்ள செயல்கள் அனைத்தையும் அம் மெய்க்கீர்த்திகள் தாங்கி நிற்கும். இவ்வாறு சிறந்துள்ள மெய்க்கீர்த்திகளுக்குப் பன்னிரு பாட்டியலில் ஓர் இலக்கணமும் கற்பித்து விட்டனர்.

“சீர்நான் காகி இரண்டடித் தொடையாய்
வேந்தன் மெய்ப்புகழ் எல்லாம் சொல்லியும்
அந்தத்து அவன் வரலாறு சொல்லியும்
அவருடன் வாழ்வெனச் சொல்லியும் மற்றவன்
இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்

திறப்பட உரைப்பது சீர்மெய்க் கீர்த்தி”

என்பது இலக்கணம். இதிலே இம்மெய்க்கீர்த்தியின் மூலம் அரசனது புகழையும் வரலாற்றையும் பட்டத்து அரசியையும், பின் அவன் இயற்பெயரையும் அறிய வழியுண்டு என அறிகிறோம். எனவே, தமிழ் நாட்டு இடைக்கால வரலாற்றை அறிய இம்மெய்க்கீர்த்தியே சிறந்த வழி காட்டியாய் அமைந்தது எனலாம்.

கல்வெட்டுக்கள் வெளி வரவேண்டும்:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொல்பொருள் ஆய்வுச்சாலை ஒன்றை அமைத்தனர். நிலத்துள் மறைந்து கிடக்கும் பல பழைய பொருள்களைத் தோண்டி எடுத்து அவற்றின் தொன்மையையும் அதனால் துலங்கப் பெறும் வரலாற்று உண்மையையும் உலகுக்கு எடுத்துக்காட்டினர். அதைப்போன்றே கோயில்களிலும் பிற இடங்களிலும் தீட்டப்பெற்ற அந்தக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து படி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/216&oldid=1376413" இலிருந்து மீள்விக்கப்பட்டது