பக்கம்:தமிழக வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தமிழக வரலாறு


மறைந்திருந்து பின்னர்த் தொல்லை தந்துமிருக்கலாம். என்வே, அவர்களை அடக்க அத்தீவுகளையும் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால் அத்தீவுகளின் மேல் இறுதியாகப் படை எடுத்துச் சென்று அவற்றையும் தன் அடிக்கீழ்க் கொணர்ந்தான். இவ்வாறு காந்தளூர்ச் சாலையில் தொடங்கிய இராசராசன் போர், அக்காந்தளூர்ச்சாலையை அடுத்த பழந்தீவு பன்னீராயிரத்தில் முடிவுற்றது. யாண்டும் அவன் மகனாகிய இராசேந்திரன் சேனைத் தலைவனாய் நின்று வெற்றி வீரனாகவே திரும்பி வந்தான்.

போர்க்கிடையில் அமைதி:

இவ்வாறு ஆட்சித் தொடக்கநாள் முதல் போரே புரிந்து நின்ற இராசராசன் நாட்டுக்கு என்ன நல்லது செய்தான் என நினைக்கக்கூடும். போரே வாழ்நாளில் சிறந்திருந்தால் நாட்டில் அமைதி எங்கே நிலைக்கும் எனவும் எண்ணலாம் என்றாலும், இராசராசன் காலத்தில் தமிழ்நாடு நல்ல அமைதியிலே பல நலன்கள் பெற்றுச் சிறக்க வாழ்ந்தது. மேலே கண்டபடி வலிய வந்த போர்களிலும் பிறவற்றிலும் வெற்றி கண்ட இராசராசன், நாட்டை அமைதி முறையில் ஆளவும் வழி வகுத்தான். தன் மகன் இராசேந்திரனுக்கு 1012இல் இளவரசுப் பட்டம் கட்டினான். அவனது ஆட்சி ஆண்டு 29க்குப் பிறகு கல்வெட்டுக்கள் இல்லை. இளவரசுப் பட்டம்கட்டி இரண்டாண்டுகள் கழித்து 1014 இல் அவன் மறைந்தான் போலும்! அவன் பரம்பரையினர் செய்தமை போன்று அவனும் துலாபாரம் ஏறினான். அவன் மனைவியாகிய உலகமாதேவி இரணிய கருப்பம் புகுந்தாள். அவனது ஆட்சி இறுதியில் நாட்டுக்கு அவன் செய்த நலன்கள் பலப்பல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/234&oldid=1358798" இலிருந்து மீள்விக்கப்பட்டது