பக்கம்:தமிழக வரலாறு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தமிழக வரலாறு


தன் ஆட்சிக் காலத்திலேயே (கி. பி. 1012) இவனை இளவரசாக்கினான். இராசேந்திரன் 1044 வரை சோழ நாட்டைச் சிறக்க ஆண்டான். தந்தையின் வழியைப் பின்பற்றிக் கங்கைக்கரை வரையில் சென்று ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். இவன் காலத்தில் சோழநாடு உச்சநிலையில் விளங்கிற்று.

இராசராசனுக்கு வானவன் மாதேவியினிடம் பிறந்தவன் இராசேந்திரன். மார்கழித் திருவாதிரையில் இவன் பிறந்தான். திருஒற்றியூர்க் கல்வெட்டின் மூலம் அம்மார்கழி ஆதிரை நாளில் இவன் திருமுதுகுன்றத்தே (விருத்தாசலம்) ஆண்டுதோறும் விழாச் செய்து வந்தான் என அறிகிறோம். இவனுக்குத் தந்தை இட்ட பெயர் மதுராந்தகன் என்பது. இவன் அழகன்; திருவாலங்காட்டுச் செப்பேடு இம்மன்னனை ‘நெற்றிக்கண் காணாத காமவேள்’ எனப் புகழ்கின்றது. இவன் பரகேசரியானான். 1012இல் இளவரசாகித் தந்தைக்குப் பின் 1014இல் சோழப் பேரரசின் தலைவனானான். தன் மகன் இராசாதிராசனுக்கு 1018 லேயே இளவரசு பட்டமும் கட்டிவிட்டான். தாம் இருக்கும்போதே தம் மக்களையும் அரசு காரியங்களில் நன்கு பழகவேண்டும் என்ற ஏற்பாட்டில் தந்தையும் மகனும் இவ்வாறு இளவரசு பட்டங்களைத் தத்தம் மக்களுக்களித்து, ஆட்சிப் பொறுப்பிலும் பங்கு கொடுத்தனர் போலும் இவனது மெய்க்கீர்த்திகள் 3-ஆம் ஆண்டு முதல் வளர்ந்து 13ஆம் ஆண்டில் நிலை பெற்றன. எனவே, இவனது வெற்றிகளும் பிறவும் அதற்குள் அமையப்பெறப் பிற்காலத்தில் அமைதியாக நாட்டை ஆண்டவன் இவன் என்பது புலனாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/238&oldid=1358828" இலிருந்து மீள்விக்கப்பட்டது