பக்கம்:தமிழக வரலாறு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

237



இவனது மூன்றாவது ஆண்டுக்கு முன் கல்வெட்டில்லை. ஒரு வேளை இளவரசுப் பட்டம் கட்டிய நாள் முதல் ஆட்சி ஆண்டைக் கணக்கிட்டு இராசராசனுக்குப் பின் மூன்றாம் ஆண்டினை ஆட்சி ஆண்டாகக் கொண்டனர் போலும்! தன் தந்தைக் காலத்தில் அவனது படையைச் செலுத்திப் பல நாடுகளை இவன் வெற்றி கொண்டதை மேலே கண்டோம். இராசேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாகை, மண்ணைக் கடகம் முதலிய நாடுகளையும் வென்று தன் அடிப்படுத்தினதாக இவன் மெய்க்கீர்த்திகள் குறிக்கின்றன.

போர்கள்:

இவனது ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு இவனது ஈழநாட்டுப் படையெடுப்பைப் பற்றிக் குறிக்கின்றது. மகாவமிசமும் 1017இல் அப்போர் நடைபெற்றதாகக் காட்டுகிறது. எனவே, இவன் ஆட்சியாண்டு இவன் இளவரசாகி நின்ற 1012-ஆம் ஆண்டிலிருந்தே கணக்கிடப் பெறுகிறது என்பது தெளிவு. இராசராசன் காலத்தில் தென்கிழக்கு ஈழத்தில் மறைந்த ஐந்தாம் மகிந்தன் மீண்டும் தளிர்த்து ஈழநாட்டுச் சோழர்தம் பகுதியைக் கொள்ளப் படையெடுத்தான். ஆயினும் இராசேந்திரன் படைக்கு முன்நிற்க ஆற்றாதவனாய்த் தோற்று அடிபணிந்தான். ஈழநாடு முழுவதும் சோழர் வசமாயிற்று. ஈழவேந்தனுடைய முடியையும், பிற வற்றையும், தேவியரையும் இராசேந்திரன் சோழ நாட்டுக்குக் கொண்டு வந்தான்; அவற்றுடன் முன் பராந்தகன் காலத்தில் ஈழநாட்டுக்குப் பாண்டியனால் அனுப்பப்பெற்ற பாண்டியர் முடியையும் இலச்சினை முதலியவற்றையும் கொண்டு வந்தான். இவனுடன் மகிந்தனும் சோழ நாடு வந்து வாழ்ந்திருந்து கி. பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/239&oldid=1376405" இலிருந்து மீள்விக்கப்பட்டது