பக்கம்:தமிழக வரலாறு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

தமிழக வரலாறு


சோழ நாட்டு எல்லை விரிந்தது. அது வரையில் சோழரோடு போரிட்டுக் கொண்டிருந்த மேலைச் சாளுக்கியர் சில காலம் போர் தொடுக்க நினைத்தாரில்லை; வடக்கிலிருந்து பல ஆண்டுகளாக விளைத்த தொல்லை இல்லை. குலோத்துங்கனும் தானாகப் படை எடுத்து நாட்டைப் பரப்புவதினும், தன் நாட்டை அமைதியோடு காக்கவே விருப்பம் கொண்டான். அந்நிலையிலே சோழ நாடு இவன் காலத்தும் இவன் பின் இவனது பரம்பரையார் ஆண்ட காலத்தும் சுமார் நூறு ஆண்டுகள் அமைதியாகவே வாழ்ந்தது எனலாம்.

போர்கள்:

எனினும், இவன் சோழநரட்டு அரசு ஏற்றதைக் கண்டு சிலர் பெறாமையுற்றனர். அவருள் மேலைச் சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தன் முக்கியமானவன். அவன் ஐந்து முறை படை எடுத்தான் போலும்! அவன் அண்ணன் சோமேச்சுவரன் சோழனோடு சேர்ந்து கொண்டான். கொந்தள வரசரோடும் மைசூர் நாட்டினரோடும் இவன் இளமைப் பருவத்திலேயே போர்மூண்டது. எல்லாப் போர்களும் இவன் பட்டத்துக்கு வந்த சில ஆண்டுகளில் முடிந்தன எனலாம். விக்கிரமாதித்தன் வரலாறு கூறும் பில்கணர் இப்போர்கள் குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்த சில ஆண்டுகளுள் நடந்தன என்று குறிக்கின்றார்.

தெற்கே இராசராசன் காலத்தில் அடிமைப்பட்ட பாண்டியர் இக்காலத்தில் தலை எடுக்கலாயினர். ஐவர் பாண்டியர் ஒன்று கூடிச் சோழர் ஆட்யைக் குலைத்து உரிமை எய்தினர். கி.பி. 1081இல் குலோத்துங்கன் அவர்கள் மேல் படையெடுத்து வெற்றி கொண்டு அவர்களையே ஆளப்பணித்துத் திறை பெற்று வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/250&oldid=1358931" இலிருந்து மீள்விக்கப்பட்டது