பக்கம்:தமிழக வரலாறு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தமிழக வரலாறு



வழி இவன் பணியும் செயலும் நன்கு தெரிகின்றன. இவன் பட்டத்தரசி தியாகவல்லி. முக்கோக்கிழான் அடிகள் என்று மற்றொரு மனைவியும் இருந்தாள். இவனுக்குப் பின் இவன் மகன் இராசராசன் பட்டத்துக்கு வந்தான்.

இராசராசன் II

பரகேசரி இராசராசன்-II பதினேழ் ஆண்டுகள் (1146-1163) அரசாண்டான். இவன் காலத்தும் நாட்டில் போரில்லை. எனினும் இவன் தந்தையைப் போன்றே பரந்த நிலப்பரப்பைப் பெற்றிருந்தான்; நாட்டில் அமைதி நிலவிற்று. இவன் தமிழ், வடமொழி இருமொழிகளிலும் வல்லவனாகிப் பற்றுக்கொண்டு அவற்றை வளர்த்தான்; தில்லைக்குப் பல திருப்பணிகள் செய்தான்; தந்தை கடலுள் ஆழ்த்திய தில்லைத் திருமால் படிமத்தைத் தேடிக் கொணர்ந்து தில்லையிலேயே அமைத்துச் சிறப்புச் செய்து, தன் குடிக்கு உண்டான பழியை நீக்கிக் கொண்டான்.

இவன் போர்கள் செய்ததில்லை என்றாலும், தக்கயாகப்பரணி இவனை வஞ்சியும் மதுரையும் கொண்டான் எனக் குறிக்கிறது. ஒரு வேளை திறை செலுத்த மறுத்தமையால் அவர்களை ஒறுத்துத் தண்டம் செய்திருப்பான் எனக் கொள்ளல் பொருந்தும். காவிரிக்கு மலயமலைப் பக்கத்தில் வழி கண்டு நாட்டில் நீர் வளம் பெருகச் செய்தவன் இவன் என்பர். இவன் ஆட்சியின் முற்பகுதியில் கங்கைகொண்ட சோழபுரமும் பிற்பகுதியில் பழையாறையும் தலைநகர்களாய் இருந்தன. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரத்தில் இவன் 'இராசராசேச்சரம்' என்ற பெருங் கோயிலை எடுப்பித்தான். அக்கோவிலின் பெயரே பின்பு 'தாராசுரம்' என மருவி வழங்கப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/258&oldid=1357886" இலிருந்து மீள்விக்கப்பட்டது