பக்கம்:தமிழக வரலாறு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

தமிழக வரலாறு



குலசேகரனுக்கு இராசாதிராசனும், பராக்கிரமனுக்கு ஈழ வேந்தன் பராக்கிரமபாகுவும் உதவினர் ஈழ வேந்தன் வருமுன் குலசேகரன் முறைப்படி ஆண்ட பராக்கிரமனைக் கொன்று அவன் நாட்டைக் கைப் பற்றினான். பின் வந்த ஈழ வேந்தன் குலசேகரனை வென்றான். பல முறை தோற்ற குலசேகரன், கடைசியில் 1167ல் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந்து உதவி வேண்டினான். பாசிப்பட்டினப் போரில் ஈழத்தார் வெற்றி பெற்றாலும் இறுதியில் சோழர் படை பாண்டி நாட்டைக் கைப்பற்றியது. குலசேகரனே பாண்டி நாட்டை ஆண்டான். ஈழ வேந்தன் பராக்கிரமபாகு தன் தோல்வி கருதி மீண்டும் சோழ நாட்டின் மேல் படையெடுக்க முயன்றான். எனினும் இராசாதிராசன் தன்னிடம் வந்திருந்த ஈழ நாட்டுச் சீவல்லபனுடன் பெரும்படை கூட்டிப் போருக்கு அனுப்பினான். சீவல்லபன் ஈழம் சென்று பராக்கிரமபாகுவைத் தோற்கடித்துத் திரும்பினான். இந்நிலையில் தோற்ற பராக்கிரம பாகு தன் விரோதி குலசேகரனை நண்பனாக்கிக் கொண்டு மகளையும் கொடுத்தான் பாண்டியனும் சோழன் உதவியை மறந்து விரோதியானான். சோழர் படை குலசேகரனை அழித்துப் பாண்டிய நாட்டிற்கு வீரபாண்டியனை மன்னனாக்கிற்று இப்போர்கள் கி. பி. 1167க்கும்-1175க்கும் இடையில் நடைபெற்றன என்பர். இவ்வாறு வெற்றி கொண்ட இராசாதிராசன் மதுரையும் ஈழமும் கொண்ட சோழ இராசகேசரி வர்மன் எனச் சிறப்பிக்கப் பெற்றான்.

இவன் பட்டத்தரசி முக்கோக்கிழான் அடிகள். புவனமுடையாள் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இவன் ஆட்சிக் காலத்திலும் எல்லை குன்றா நிலையில் நாட்டில் பல சிற்றரசர்களும் (ஆந்திரர் உட்பட) கப்பம் கட்டி வாழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/260&oldid=1357899" இலிருந்து மீள்விக்கப்பட்டது