பக்கம்:தமிழக வரலாறு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

259


குலோத்துங்கள்-III:

இராசாதிராசனுக்குப்பின் பரமேசரி குலோத்துங்கள் (1178-1218) பட்டத்துக்கு வந்தான். இவன் யார் என்பது தெரியவில்லை. இவனை இரண்டாம் இராசராசன் தம்பி என்றும், கொங்கு சோழர் பரம்பரையினன் என்றும் கூறுவார் கூற்றுப் பொருந்தாது இவன் இரண்டாம் இராசராசன் பழையாறையில் இறக்கும் போது விடப்பட்ட இரண்டாண்டுக் குழந்தையே எனக்கொள்ளல் பொருத்தமாகும். இவன் இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேச்சுரத்தைத் (தாராசுரம்) தன் தந்தை கட்டியதாகக் கூறிக்கொள்வதே இதற்குச் சான்றாகும். இவன் கி.பி. 1178 முதல் 1218 வரை ஆண்டான். இவன் ஆட்சித் தொடக்கத்தில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. முன் இராசாதிராசனால் முறியடிக்கப்பட்ட குலசேகரன் மகன் விக்கிரமன் இவனை அடுத்தான் இராசாதிராசனால் அரசனாக்கப்பட்ட வீரபாண்டியனும் சோழர் உதவியை மறந்து ஈழத்தாருடன் நட்பினனாயினன். எனவே, குலோத்துங்கன் வீரபாண்டியனை வென்று விக்கிரமனைப் பாண்டி நாட்டு மன்னனாக்கினான். மீண்டும் வீரபாண்டியன் சேரன் துணைக்கொண்டு சோழரை எதிர்த்தான் இம்முறை சோழன் அவனை அடியோடு முறியடித்தான் பிறகு வேறு வகையன்றி வீரபாண்டியன் சேரன் வீரகேரள னை அடைக்கலம்புக, இருவரும் சோழனை வந்து அடுத்தனர். சோழன் அவர்களுக்குச் சிறப்புச் செய்து வீரபாண்டியனுக்குப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியையும் அளித்தான். இவை அனைத்தும் 1188-1193-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடை பெற்றன.[1]


  1. 1

1. பிற்காலச் சோழர் வரலாறு 11-பண்டரத்தார், பக்கம் 146-151.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/261&oldid=1357907" இலிருந்து மீள்விக்கப்பட்டது