பக்கம்:தமிழக வரலாறு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழக வரலாறு



இராசராசன் III: (1218-1256)

மூன்றாங் குலோத்துங்கனுக்குப் பின் இராசகேசரி மூன்றாம் இராசராச சோழன் பட்டத்துக்கு வந்தான். இவன் தந்தை காலத்திலேயே இளவரசுப் பட்டம் பெற்றவன்; இவன் திறமற்றவன். எனவே, இவன் காலத்தில் சோழ நாட்டு எல்லை குறுகிவிட்டது. வடக்கே ஹொய்சளரும் தெற்கே பாண்டியரும் தலைதூக்கினர். எனினும் அவர்கள் இருவரும் தமக்குள் மாறிமாறிப் போரிட்டுக் கொண்டமையே இவன் இடையில் சிறிதளவாவது தன் நாட்டைக்காத்துக் கொள்ள உதவிற்று எனலாம். விசயாலயன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இவன் காலத்தில் வீழ்ச்சியுற்றது எனலாம். காடவராயன் போன்ற பல சிற்றரசர் உரிமை பெற்றனர்.

1201ல் மதுரையில் மாறவர்ம சுந்தரபாண்டியன் பட்ட மெய்தினான். அவன் சிறந்த வீரன். தன் முன்னோர் உற்ற அல்லல்களையெல்லாம் உணர்ந்த அவன், குலோத்துங்கன் இறந்ததும் (1218ல்) சோழ நாட்டின் மேல் படையேடுத்தான். அவன் கல்வெட்டுக்கள் பல சோழ நாட்டில் உள்ளன. அவன் தஞ்சையையும் உறையூரையும் தகர்த்தான். சோழ மக்கள் துன்பமுற்றனர். இராசராசன் சுற்றத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தான். படை எடுத்து வந்த பாண்டியன் பழையாறையில் தங்கி, சிதம்பரத்தையும் தரிசித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான். அது காலை இராசராசன் பாண்டியனுடன் சமாதானம் செய்து கொண்டு இழந்த சோழ நாட்டைப் பெற்று, மீண்டும் பழையாறையில் இருந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். அவ்வாறு பாண்டியன், இராசராசனுக்குச் சமாகாணத்தில் நாட்டைத்தந்தமைக்குக் காரணம் வடக்கே இருந்த போசளர் சோழருக்கு உதவ வந்தமையேயாம் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/266&oldid=1357946" இலிருந்து மீள்விக்கப்பட்டது