பக்கம்:தமிழக வரலாறு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

275


காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுமாறு ஊர்ச்சபையார் கிழவரைக் கேட்டனர். அவர் ஆவணம் காட்டி வெற்றி பெற்றார். இன்றும் உரிமை வழக்கை அறிந்து உண்மை காண ஏறக்குறைய இதுபோன்ற முறை கையாளப்படுவதை நாம் அறிவோம். மற்றைய குற்றம் பற்றிய வழக்குகளையும் இவ்வூர்ச் சபையாரே ஆராய்ந்து தீர்ப்புக் கூறினர். திருடு, பொய்க்கையொப்பம், ஒழுக்கக் குறை முதலியன பெருங்குற்றங்களாக கருதப்பட்டன. இக்குற்றங்களை அரசகுடும்பத்தவர் செய்யின், அரசனே விசாரித்துத் தண்டிப்பான். மற்றவரை ஊர்ச்சபையார் தண்டிப்பர். இப்படி அரசியலுடன் ஆட்சி முறையையும் நிருவாகத்தையும் நீதியையும் சோழ மன்னர் ஒழுங்குபடுத்தி நாட்டை ஆண்டு வந்தனர்.

கிராம ஆட்சி:

சோழர் காலத்தில் கிராம ஆட்சியே சிறந்ததாய் விளங்கிற்று. கிராமச் சபைகளே மக்கள் ஆட்சியில் பெரும் பங்கு கொண்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பெருஞ்சபையும், தனித்தனி பணிகளைக் கவனிப்பதற்காகச் சிறு உட்சபைகளும் (Committees) இயங்கி வந்தன. ஊரில் விளையும் பொருள்களைப் பொதுவாக வாங்கவும் விற்கவும் சிலரை இச்சபையார் ஏற்பாடு செய்திருந்தனர் கூட்டுறவு முறையில் பண்டகசாலைகள் இன்றேனும், பொருள்கள் முட்டுப்படாதிருக்கவும் பொருள்களின் விலைகள் ஏறியும் சரிந்தும் மக்களுக்கு ஊறுபடுத்தாதிருக்கவும் இத்தகைய ஒரு நல்ல முறையை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தச் சபையினர் தேர்வு மூலமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். உத்திரன்மேரூர் கல்வெட்டு ஒன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/277&oldid=1376187" இலிருந்து மீள்விக்கப்பட்டது