பக்கம்:தமிழக வரலாறு.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தமிழக வரலாறு



குடவோலைவழித் தேர்தல் நடக்கும் வகையினை விளக்கிக் காட்டுகிறது. இவ்வூர்ச் சபைகளைத் தவிர்த்து, கோயில் நிருவாகத்திற்கெனவும், அறங்களைக் காப்பதற்காகவும் ஊர்தொறும் தனித்தனிச் சபைகளிருந்தன.

இச்சபைகளில் உள்ளோர் யாவரும் யாதொரு வருவாயினையும் எதிர்நோக்காது தொண்டு செய்யும் நிலையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்ச் சபைக்குத் தலைவர் உளர். வியாபார சம்பந்தமான செயல்களைக் கவனிக்கும் ‘அதிகாரி’ எனப்படுவர். இச்சபைகள், கோயில்கள், அற நிலையங்கள், மன்றங்கள் ஆகியவற்றின் வருவாயை அரசியல் அதிகாரிகள் பார்வையிடும் உரிமை பெற்றிருந்தனர். பெரிய ஊர்களில் பெருஞ் சபை, சிறு சபை எனப் பல பிரிவுகள் இருந்தன போலும்! பெரிய சபைகள் ஏரி முதலியவற்றைக் கவனிக்க இருந்தன. இச்சபைகளின் கீழ் வரிகளை வசூலிப்பவராகப் பல பணியாளர் இருந்தனர். கடமை, குடிமை முதலிய வரிகளும் வசூலித்தனர் எனத் தெரிகிறது. சிறு ஊர்கள் போக, நகரங்களுக்கும் பெரு நகரங்களுக்கும் இக்காலத்தைப் போல் நகராண்மைச் சபைகள் (Municipality & Corporation) இருந்தன. அவற்றின் பணிகளும் பலப்பல. நாடு முழுதுக்கும் ஆளும் சட்ட சபைகளும் (Territorial Assembly) சிறந்து அமைந்திருந்தன. சபைகளில் பல பொருள்கள் ஆராயப்பெறும். பெரும்பான்மை என்ற பொருளற்ற வாக்குரிமை முறை அக்காலத்தில் இல்லை. ஒன்றைப் பற்றி இருவேறு கருத்துக்கள் தோன்றின், அவற்றைச் சபைகளில் நன்கு ஆராய்வர். பின்பு அத்துறையில் வல்ல அறிஞர்களைக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து நல்ல முடிவினை வாக்குரிமை இன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/278&oldid=1358041" இலிருந்து மீள்விக்கப்பட்டது