பக்கம்:தமிழக வரலாறு.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்


(Governors) அவ்வப் பகுதியின் அமைதிக்குப் பொறுப்பாளிகளாவார்கள். மற்ற மாகாணத்தவர்களைக் காட்டிலும் மதுரை நாயக்கர்கள் சில தனி உரிமைகள் பெற்றுச் சிறக்க வாழ்ந்தார்கள் எனலாம்.[1]

நாட்டு ஆட்சி சோழர் காலத்தில் மேலே கண்டமை போன்றே கிராம ஆட்சியாய் அமைந்தது. கிராமந்தோறும் சபைகளும் உட்சபைகளும் இருந்தன. நிலவரி வசூலித்தல், அமைதி நிலை நாட்டல், தவறு நேர்ந்துழித் திருத்தல் போன்ற பலவகையில் அவை பணி புரிந்தன. விசயநகரப் பேரரசு அமைதியாக நிலைபெற்றதற்குக் காரணம் இக்கிராமச் சபைகளே எனலாம். இவையே ஒவ்வொரு பகுதியிலும் தொல்லை நேராவண்ணம் காத்து, மக்களைத் தூயவழியில் செலுத்தின எனலாம். பொதுநலத்தையும், பொதுப் பணிகளுக்காகத் தரும் பொருளையும், பாதுகாத்து அறம் ஒம்பும் நல்ல சபைகளாகவும் அவை அமைந்திருந்தன. இத்துணைக் கிராம ஆட்சியும் விசயநகர ஆட்சியின் பிற்பகுதியில் சிறுகச் சிறுகக் குறைந்து வேறு வகையில் கிராம ஆட்சி அமைந்துவிட்டது. ஆயக்காரர் என்பார் வசம் தனித்தனி ஒவ்வோர் ஊரும் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப்பதில் அரசாங்கத்தாராலேயே நியமிக்கப்பெறுவர். அவர்களுக்கு அரசாங்கத்தால் மானியம் வழங்கப்பெற்றது. அவர்கள் அந்த ஊர் எல்லையின் அதிகாரிகளாயினர். அவர்கள் தங்கள் அதிகார உரிமையைவிற்கவும் அடமானம் வைக்கவும் கூடிய அந்த அளவுக்கு உரிமை பெற்றுவிட்டனர். எனவே, விசயநகரத் தார் ஆட்சியின் பிற்காலத்தில் பழஞ்சோழர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த மக்களாட்சி வாழ்க்கை


  1. 1. Administration & Social Life under Vijayanagar, Empire P. 197
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/311&oldid=1358670" இலிருந்து மீள்விக்கப்பட்டது