பக்கம்:தமிழக வரலாறு.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தமிழக வரலாறு


அரசர்கள் இல்லையாதலானும், மேலைநாட்டவர் தம் புதுப்புதுப்போர் முறைகளாலும், ஆயுதங்களாலும் அவர் தம் வாணிபப் பொருள்களாலும், பிரித்தாளும் தந்திர முறைகளாலும் தமிழகம் மட்டுமன்றிப் பரந்த பாரததேசமே அவர்களுக்கு அடிமையாகி அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டது.

ஆங்கிலேயர் ஆதிக்கம்:

தமிழ்நாட்டு வட எல்லையில் உள்ள பழவேற்காடு (Pulicut) தொடங்கி நாகைப்பட்டினம் வரையில் மேலை நாட்டு வல்லரசுகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் கடற்கரைத்துறைமுகங்கள் அமைக்கவிரும்பின. போர்த்துக்கீசியர் முதன்முதன் சென்னையில் உள்ள மயிலையில் தங்கி ஆதிக்கம் செலுத்தியபோதிலும் பின் பிரெஞ்சு ஆங்கிலர்தம் போராட்டத்தில் அது நிலைமாறி இறுதியில் ஆங்கிலேயரிடமே நின்றது. வடக்கே பழவேற்காட்டில் டச்சுக்காரர் ஒரு கோட்டையையும் அமைத்தனர். அதன் சிதைந்த நிலையினை இன்றும் காணலாம். போர்த்துக்கீசியர் தம் மயிலை (Santhome) அருகிலே ஆங்கிலேயர் 1639ல் இப்போதைய சென்னை நகர் உள்ள இடத்தைச் சந்திரகிரி அரசரிடமிருந்து பெற்றனர். சந்திரகிரி மன்னருக்குப் பின் கோல்கொண்டாவின் தளபதியாய் வந்த மீர் ஜம்லா (Mir Jumla)வும் வாணிப நோக்குடையனாதலால் கோல்கொண்டா உத்தரவு பெற்று, ஆங்கிலேயருக்கு மேலும் வேண்டிய சலுகைகளை அளித்து, அவர்தம் கடலாதிக்கத்தையும் வாணிப வளனையும் பெருக்க வழி செய்தான். அதற்குப்பின் அங்கு இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகங்களாலும் பிறவாற்றாலும் ஆங்கிலேயக் கம்பெனியார் கோட்டைகள் கட்டித் தம் வாழ்வை இங்குப் பெருக்கிக் கொள்ள இயல-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/336&oldid=1376085" இலிருந்து மீள்விக்கப்பட்டது