பக்கம்:தமிழக வரலாறு.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தமிழக வரலாறு


தம் பொம்மை ஆகிவிட்டார் எனலாம். தமிழ்நாட்டில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பிரெஞ்சு தன் ஆதிக்கம் இழக்க, கிளைவின் ஆங்கில ஆதிக்கமே நாள்தொறும் ஓங்கி வந்தது. ஆங்கிலேயர் தம் பிற்கால நிலைத்த ஆட்சிக்கு ஆர்க்காடே வித்திட்டது என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாகும் அதுமுதற்கொண்டே தமிழில் வழங்கும் ‘கும்பினி அரசாங்கம்’ என்னும் கிழக் கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டே வந்தது. வடக்கே தில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய இடங்களிலே நடந்த உள்நாட்டுக் கலகங்களிலும் பிறவற்றிலும் ஆங்கிலக் கம்பெனியார் பங்கு கொண்டு சிறுகச் சிறுகத் தம் ஆதிக்கத்தை நாடு முழுவதும் பரப்பி வந்தனர். டில்லியில் ஆண்ட முகலாய மன்னர்களும், நாட்டின் பிறபகுதிகளில் அவர்தம் ஆணையின் கீழ் ஆண்ட பிற சிற்றரசர்களும் ஒருவர் பின் ஒருவராய் ஆங்கிலேயர்தம் ஆட்சி எல்லைக்கு உட்பட்டு அடிமை ஆயினர் எனலாம். ஆங்கிலேயரும், தாம் கொண்ட இடங்களிலெல்லாம் ஆணையோடு, வாணிபம், கைத்தொழில், கல்வி முதலியவற்றையும் வளர்த்து, மக்களை அச்சத்தாலும் அன்பு வழியாலும் தம் வழிக் கொண்டு, நிலைத்த ஆட்சி நடை பெற வழிகோலினர் எனலாம் கிளைவ், தென்னாட்டில் செய்தது போன்றே வடநாட்டிலும் பலப்பல சூழ்ச்சிகள் செய்து ஆங்கிலேயர் தம் ஆட்சி வளர வழி கண்டான். தெற்கே மைசூரில் ஹைதர் அலியும், ஐதராபாத்து நிசாம் மன்னரும் தலைநிமிர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்கும் அளவுக்கும் வந்தனர் எனலாம். ஆயினும், அதற்குள் வட நாட்டிலும் பிற இடங்களிலும் ஆங்கிலேயர் ஆட்சி வளர, அனைத்தையும் தாங்கும் பொறுப்பை ‘வாரன் ஹேஸ் டிங்ஸ்’ என்பவர் வசம் ஒப்புவித்து அவரைக் (கவர்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/338&oldid=1359018" இலிருந்து மீள்விக்கப்பட்டது