பக்கம்:தமிழக வரலாறு.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

343


ஆங்கிலேயர் செயல்கள்:

ஆங்கில மக்கள் இந்திய நாட்டை ஆண்ட வரலாற்றைப் பற்றியும் அவர்கள் இந்திய மக்களை நடத்திய விதங்கள் பற்றியும் இன்று நாட்டில் எத்தனையோ வகையான வரலாற்று நுால்கள் உள்ளன. அவற்றின் வழியெல்லாம் அவர்கள் மக்களைக் கொடுமைகளுக்குள்ளாக்கிய நிலைகள் ஒரு பக்கமும், செய்த நலன்களின் நிலைகள் ஒரு பக்கமும் தோன்றா நிற்கும். பொதுவாக ஆங்கிலேயர்கள் இந்நாட்டு மக்களை வருத்தித் தம் வாழ்வைப் பெருக்கும் வழி கண்டார்கள். என்றாலும் ஆங்கிலேயருள் சிலர் இங்கு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கருத்தழிந்து பேசியுள்ளனர். அதே போன்று ஆளவந்த நிலையில் அமைந்துவிடாது ஒரு சிலர் இந்நாட்டுக் கலைகளையும், நூல்களையும், பிற இயல்புகளையும் கண்டு, தம்மை மறந்து அவற்றுள் ஆழ்ந்து, அவற்றைத் தம் மொழியில் பெயர்த்தமைத்து இந்திய இலக்கியங்களையும் பிறவற்றையும் உலகறியச் செய்தனர். மேலும் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு பிரிவுகளையும், மக்களினத்தில் உள்ள உயர்வு தாழ்வுகளையும் கண்டு வருந்தி அத்தகைய வாட்டம்போக்கவும் வழி செய்தனர் இவ்வாறு செய்தவர் பலர். அவர்களுள் திரு. பணிக்கர் அவர்கள் மூவரை முக்கியமாகக் குறிக்கின்றார்.[1] அவர்கள் எட்மண்டு பர்க்கு. வில்லியம் ஜோன்ஸ், மெக்காலே என்பவர்கள் பர்க்கு இந்திய மண்ணை மிதியாதவராயினும், இங்கு ஆங்கிலேயர் செய்யும் கொடுமைகளை அறிந்து, மக்கள் உரிமையுடன் வாழ வேண்டுமென்று இங்கிலாந்திலே அறிவுறுத்தியும் பாராளுமன்றத்து உறுப்பினரை அறிய வைத்தும் மக்களை மக்களாகவே வாழ வழி வகுத்தவர். ஜோன்ஸ் இங்கு


  1. Survey of Indian History, p. 207.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/345&oldid=1359049" இலிருந்து மீள்விக்கப்பட்டது