பக்கம்:தமிழக வரலாறு.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தமிழக வரலாறு



காலத்துக்கே உரியதாகும். வடக்கே வேதத்தையும் சாகுந்தலம் போன்ற பிற வடமொழிக் காவியங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமை போன்று தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றன. தமிழில் உள்ள திருக்குறளை உலகில் பலப்பல மொழிகளில் மொழிபெயர்த்தனர். திருவாசகத்தையும், திருக்குறளையும் டாக்டர் போப்பு நன்கு உலகம் அறிந்து போற்றுமாறு மொழி பெயர்த்து, அவ்வுலக மக்கள் அனைவரும் தமிழ் இலக்கிய மாண்பினையும், தமிழர் பெருமையையும் நன்றிகறியச் செய்தார். சமயத்தொண்டு புரிய வந்த 'டாக்டர் 'கால்டுவெல்' அது வரை உலகம் கண்டிராத வகையில் மொழி நூல் இயற்றித் திராவிட மொழிகளின் தொன்மையையும், அவற்றுள் தமிழ்மொழியின் தனிச் சிறப்பு இயல்பையும், அது வடமொழித் தொடர்பில்லாது இயங்கும் ஆற்றல் பெற்றுள்ள நிலையையும் கண்டு உணர்ந்து உலகுக்குக் காட்டியுள்ளார். இப்படிப் பலப்பல வகையில் தமிழ் இலக்கியமும் பிறவும் தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்து, உலகம் அவற்றை அறிந்துகொண்ட ஓர் ஒப்பற்ற காலமாய் விளங்கியது ஆங்கில ஆட்சியின் காலமாகும். நாட்டில் ஆங்கில மொழி வளர்வதன் முன் இந்தியாவில் தமிழும் இந்தியுமே இலக்கிய வளத்துடன் சிறத்திருந்தனவெனப் பணிக்கர் கூறியாங்கு [1]தமிழ் அவர்கள் வருகைக்கு முன்னரே வளம் பெற்றிருந்தது. ஆங்கிலேயரும் அவர்வழி வந்த சமய வளர்ச்சியாளரும் அம்மொழியை

வளம்பெறச் செய்து சிறந்த இலக்கியங்களை மொழி பெயர்த்து உலகறியச் செய்ததோடு, இத்தமிழ் கலந்த திராவிடமொழிக் குடும்பமே உலகில் தொன்மை வாய்ந்ததென்றும் உயர்ந்ததென்றும் உலகம் அறிந்து கொள்ளுமாறு செய்தார்கள்.


  1. 1. A Survey of Indian History, p. 235
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/358&oldid=1358895" இலிருந்து மீள்விக்கப்பட்டது