பக்கம்:தமிழக வரலாறு.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

337


உரிமை வேட்கையும் விடுதலையும்:

எனினும், அத்தகைய ஆங்கிலப் பேரரசும் 1947 ஆகஸ்டு 15ல் இம்மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டது. ஏன்? அது அந்நிய ஆட்சியாய் இருந்த காரணத்தாலும் அது சேர்த்துவைத்த பாரத சமுதாயத்தின் கூட்டு வளர்ச்சியாலும், அவ்வளர்ச்சி வழிக் கண்ட 'காங்கிரஸ்' தாபனத்தின் உழைப்பாலும், இரண்டு பெரும் போர்கள் உலக அரங்கில் உண்டாக்கிய பல்வேறு மாறுதல்களின் காரணங்களாலும், பல நன்மைகளுக்கிடையே ஆட்சியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்ற காரணத்தால் அவ்வப்போது செய்த சில கொடுமைகளாலும், உலகெங்கனும் உண்டான உரிமை வேட்கை உணர்ச்சியினாலும் ஆங்கில ஆட்சி இந்திய மண்ணில் மட்டுமின்றி பர்மா, மலேசியா, இலங்கை முதலிய பல இடங்களிலிருந்தும் விலகி, அந்நாடுகளுக்கெல்லாம் உரிமை வழங்கிற்று. இந்தியநாடு விடுதலை பெறக் காரணமாயிருந்தது காங்கிரஸ், இது முதல் முதல் 1885ல் தோன்றியது. அக்காலத்தில் இதைத் தோற்றி வளர்த்த பெருமையில் ஆங்கிலேயர்க்கும் பங்கு உண்டு. இது சிறந்த நாட்டுச் சேவைசெய்யும் தாபனமாய் வளர்ந்ததாயினும், காந்தியடிகள் இதில் பங்குகொள்ள ஆரம்பித்த பிறகே இது நன்கு வளர்ந்து நாட்டுணர்ச்சியை உலகுக்குக் காட்டிற்று எனலாம். இந்தக் காங்கிரஸ் பணியிலும் இதன் வழி இந்தியா உரிமைபெறச் செய்த எல்லாப் பணிகளிலும்கூடத் தமிழ்நாட்டின் பங்கு தலைசிறந்ததாகும். காங்கிரஸ் தோன்றிய அந்த நாள் தொட்டு இன்றுவரை தமிழர் அதில் பங்கு கொண்டு உழைத்து, கவி பாடி உயிர் இழந்து, ஊக்கத்தோடு முன்னேறும் வழியில் நின்று ஆவன புரிந்துள்ளார்கள். அடுத்து உரிமைப் போராட்டங்கள் பற்றியும் அவற்றுள் தமிழ்நாடு கொண்ட பங்கைப் பற்றியும், உரிமைபெற்றபின் தமிழ் நாடு இன்றுள்ள நிலைபற்றியும் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/359&oldid=1358908" இலிருந்து மீள்விக்கப்பட்டது