பக்கம்:தமிழக வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழக வரலாறு


யில் எழுந்ததுதானே? கடைசியாக இந்த மொழியின் அடிப்படையில் பரந்த பாரத நாட்டைப் பிரித்த இன்றை அரசாங்கச் செயலும் இந்திய நாட்டு அரசியல் வரலாற்றில் நிலைத்த இடம் பெற்ற ஒன்றுதானே? அவ்வப்போது மொழிகள் மோதுண்டதால் உண்டாகும் பிணக்கும் போரும் உலகில் காணும் நிகழ்ச்சிகளாயினும், இம்மொழிகள்–மனிதனை மனிதனாக்கிய இம்மொழிகள்–அம்மனிதனது வரலாற்றில் அழியாத நிலைத்த இடம் பெற்று அவனது சென்ற காலச் சிறப்புக்களையெல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பார் யார்?

இலக்கியங்கள்

இனி, வரலாற்றுக்கு இலக்கியங்கள் எவ்வாறு துணையாகின்றன என்பதைக் காணலாம். உலக வரலாற்றுக்கு உலகில் உலவும் பல்வேறு மொழிகளில் தோன்றிய இலக்கியங்கள் ஓரளவு துணை புரிகின்றன. எனினும், நம் தமிழக வரலாற்றில் இலக்கியங்களே பேரளவு உதவி புரிகின்றன எனலாம். பழங்கால வரலாறு என்று பள்ளியில் பயிலும் மாணவர் உரோம, கிரேக்க நாட்டு வரலாற்றையும் எகிப்து, மெசபட்டோமியா வரலாற்றையுமே கற்பதோடு அமைகின்றனர். ஆனால், அவற்றோடு பல வகையில் ஒத்துள்ள, காலத்தால் ஓரளவு முந்தித் தோன்றியது எனக் கருதும் பழந்தமிழ் நாட்டு வரலாற்றை அவர்கள் காண்பதில்லை. அந்தப் பழந் தமிழ்நாட்டு வரலாற்றை நமக்கு நன்கு விளக்கிக் காட்டுவன தமிழ் இலக்கியங்களேயாம். தொல்காப்பியர் காலம் தொட்டு, ஏன்–அதற்கு முன்புங்கூட–தமிழில் சிறந்த இலக்கியங்கள் இருந்தன. ஆனால் அவற்றுள் பெரும்பாலன கிடைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/36&oldid=1357061" இலிருந்து மீள்விக்கப்பட்டது