பக்கம்:தமிழக வரலாறு.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

தமிழக வரலாறு


சென்னையில் ஆங்கிலேயரால் நடத்தப்பெற்ற இரண்டோர் ஆலைகள் சிறிது வளர்ச்சி அடைந்திருந்தன. மற்றும் முதல் உலகப்போருக்குப் பிறகு இந்தியக் கீழ்க்கரை வாணிபம் வளர்ச்சி அடைந்தது எனலாம். பர்மா, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், சையாம் போன்ற இடங்களில் இந்திய வாணிபம் வளரலாயிற்று. அவவாணிப வளர்ச்சியில் பங்கு கொண்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. நாட்டுக்கோட்டை நகரத்தார் என்னும் நம் தமிழ் நாட்டுத் தனவணிக மக்கள், இந்தக் கீழை நாடுகளெல்லாம் சென்று, தமது வாணிப வளனைப் பெருக்கினார்கள். அவர்கள் வழி ஒரளவு தமிழ்நாட்டில் செல்வம் செழித்தது எனலாம். அதைப்போன்றே தென்னாப்பிரிக்காவிலும், மெளரிஷியஸ் முதலிய அரபிக் கடலின் மேலைத்தீவுகளிலும் தமிழர் பெரும்பாலராகச் சென்று வாணிபத்தைப் பெருக்கினார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடலாதிக்கமும், கடல் வாணிய வருவாயும் நன்கு வரப்பெற்றிருந்த தமிழ் மக்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் தம் வாணிபத்தைப் பல நாடுகளிலும் பரப்பினர். இன்றும் இந்தியாவிலிருந்து அதிகமாக வெளிநாடுகளில் சென்று வாழ்கின்ற மக்கள் தமிழர்களே எனலாம்.

வெளி நாடுகளில் தமிழர்கள்:

ஆங்கில ஆட்சியின் கீழ்ப்பட்ட இலங்கை, பர்மா, மலேயா முதலிய நாடுகளில் காடு கொன்று நாடாக்கி ரப்பர், ஈயம், டீ முதலியவற்றின் உற்பத்தியைப் பெருக்க மக்கள் பலம் தேவை இருந்தது. அதற்காக ஆங்கிலேயத் தோட்ட முதலாளிகள் இங்குள்ள ஆங்கில ஆட்சியின் துணை பற்றிப் பல மக்களைக் கூலிகளாக அழைத்துச் சென்றனர். தமிழ்நாட்டில் போர் காரணமாக உண்டான வறுமையால் மக்கள் வாழ வசதியின்றி வாடி இருக்கும் காலத்தில் இந்த அழைப்பு ஒரு ‘வரப்பிரசாதமாக’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/364&oldid=1376082" இலிருந்து மீள்விக்கப்பட்டது