பக்கம்:தமிழக வரலாறு.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

365


யில் அவ்வப்போது அழிக்கப் பெற்றது என்பது அறிந்ததொன்று. வடக்கே பாகிஸ்தான் உருவான பின்பு தமிழ் நாட்டிலே உள்ள இசுலாமியர்கள் எந்த வேறுபாடும் இன்றி, இங்குள்ள மக்களோடு இணைந்து வாழும் வகையில் நன்கு பழகிவிட்டனர். அதற்கேற்றாற்போன்று மாநில, பாராளுமன்றத்தேர்தல்களிலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனி நிலைமாறி, அவர்களை மற்றவரோடு அணைத்துச் செல்லும் நிலையும் உண்டாகிவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் மதத்தால் வடநாட்டில் நடைபெற்ற 'நவகாளி'க் கொடுமைகள் போன்ற ஒன்றும் தலை விரித்தாடவில்லை.

தமிழர் பங்கு:

இந்திய விடுதலைப் போராட்டத்திலெல்லாம் தமிழர் பங்கு மற்றவர்களுடையதைக் காட்டிலும் குறைந்தது என்று சொல்ல இயலாது. தோன்றிய அந்த நாள் தொட்டு, வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிலா, சீனிவாச ஐயங்கார், இராசகோபாலச் சாரியார், சத்தியமூர்த்தி, திரு வி. கலியாணசுந்தரனார், ஈ. வே. இராமசாமி நாயகர், முத்துரங்க முதலியார் போன்ற தமிழ்த் தலைவர் அந்த இயக்கம் வளர்வதற்கும் விடுதலைக்கு வழி காண்பதற்கும் வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்தனர். இவர்கள் அனைவரும் காந்திய வழியில் பங்கு கொண்டு பாடுபட்டனர். விடுதலைக் கவிஞராகிய சுப்பிரமணிய பாரதியார் அவர்களுடைய இலக்கியத் தொண்டினை நாடு மறக்க முடியாது. இந்திய வரலாற்றிலேயே வெள்ளைக்காரனுக்கு எதிராகக் கப்பல் கம்பெனியைத் தோற்றுவித்து வீரத்தோடு முன்னின்று நடத்திய வ உ. சிதம்பரனார் அவர்களைத் தமிழ் நாடு மறக்க முடியுமா? கொன்றாலும் கொண்ட கொடியை விடேன்!' என்று கூறி, அப்படியே அடிபட்டு இறந்த திருப்பூர்க் குமரன் பெயர் தமிழ்நாட்டில் மறையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/367&oldid=1358982" இலிருந்து மீள்விக்கப்பட்டது