பக்கம்:தமிழக வரலாறு.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

367


களும் தோன்றலாயின. ஆங்கிலேயர் ஒருவர் கூறியபடி[1] நம் தமிழ் நாட்டில் சாதியின் பேரால் வேறுபாட்டுக் கொள்கைகள் வளரலாயின. வெளி நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயரோடு பெரும்பாலும் நெருங்கிப் பழகி அவர்களுடைய ஆட்சிச் சபைகளிலும் இடம் பெற்றவர்கள் பிராமணர்கள். எனவே, அவர்கள் வழி மாகாண ஆட்சியிலும் மத்திய ஆட்சியிலும் பல பிராமணர்கள் செயலாற்றியிருப்பர். அது கண்டு பெரும்பாலான மக்கள் வெறுப்புக் கொண்டு அந்த ஆட்சியை வெறுக்கவும் நினைத்திருப்பர். காங்கிரசிலும் அந்த வேறுபாடு புகுந்து கொண்டது. எனினும் அதை வற்புறுத்திய சில தலைவர்கள் அதை விட்டு வெளியேற முடிந்ததே தவிர, அது காங்கிரசை ஒன்றும் செய்ய இயலவில்லை. 1926ல் காஞ்சியில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் இவ் வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்துக்காகப் போராடி, அதனுள் இருந்து வெற்றி காண முடியாது என்ற காரணத்தால் ஈரோடு இராமசாமி நாயக்கர் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். அதே காலத்திலும் அதனை ஒட்டிச் சில ஆண்டுகளிலும் தமிழ் நாட்டில் நீதிக் கட்சி அமைத்த பிராமணரல்லாத மந்திரிசபை ஆங்கிலேயர் ஆணைகளுக்குக்கட்டுப் பட்டு அடங்கிச் செயலாற்றி இருந்தது. அது பிராமணரல்லாதாருக்கெல்லாம் உதவ வேண்டுமென வகுப்புவாதப் பிரதிநிதித்துவ முறையில் அரசாங்க உத்தியோகங்களைப் பகிர்ந் தளித்ததன்றி, பயிலுவதற்கெனத் தாழ்ந்த வகுப்பார் பலருக்கும் வசதி செய்து இலவசக் கல்வி பெற வழியும் செய்தது இம்முறைகள் இன்று முற்றும் இல்லை யேனும், ஒரளவு தொழிற்பட்டு வருகின்றன என்று கூறல் தவறாகாது.


  1. 1 A Book of South India, pp. 15 to 19; 115 & 116

2. Justice Party

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/369&oldid=1359006" இலிருந்து மீள்விக்கப்பட்டது