பக்கம்:தமிழக வரலாறு.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தமிழக வரலாறு


செயல்படவில்லை. பல கல்வெட்டுகள் எடுக்கப்பெற வேண்டும். எடுத்தவை பல அச்சில் வரவேண்டும். அவற்றின் வழி வரலாறு ஒளி பெற வேண்டும். தமிழ் மக்கள் நின்று, நினைத்து, தம் பழம் பெறும் பண்பாட்டையும் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஒளவை வாக்கினை எண்ணி நல்லன இயற்றி உள்ளதைப் பங்கிட்டுக் கொண்டு ஒன்றிய ஒரே உயர் சாதியாய்-தமிழ்ச் சாதியாய் வரப் பாடுபட வேண்டும். தமிழக அரசும் தமிழ்ச் சமுதாயமும் ‘தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு’ தன்மையில் செயலாற்றி, பாரதத்தொடு இணைந்த பழம் பெருந் தமிழ்நாட்டையும் தமிழ்ச் சமுதாயத்தையும் தமிழையும் பண்பாட்டினையும் தமிழ்க்கலையினையும் ஓம்பி வளர்த்து உலகில் சிறக்க வாழ வழி காண வேண்டும் என்று தாழ்ந்து வேண்டி அமைகின்றேன்.

XX. எலும்புக் காலம் பற்றிய
வரலாற்று ஆராய்ச்சி

வரலாற்று எல்லை பழைய கற்காலத்தில் தொடங்கப் பெற்றதெனக் கண்டோம். வரலாறு பற்றி எழுதிய எல்லா ஆசிரியர்களும் அந்த முடிவினையே கொண்டிருந் தார்கள். எனினும், அண்மையில் பழைய கற்காலத்துக்கு முன் எலும்புக் காலம் ஒன்று இருந்ததாக அறிஞர் ஆய்ந்தனர். அந்த ஆய்வு சரியெனவே முடிவாயிற்று. அண்மையில் ஜோஹன்ஸ்பர்கில்[1] இருந்துவந்த செய்தி, பேராசிரியர் டேர் (Dare) அவர்கள் ஆய்ந்து அகழ்ந்தெடுத்த நிலையில் கண்ட உண்மையினைக் காட்டி, பல், எலும்பு, கொம்புகளை உபயோகித்த எலும்புக் காலம் ஒன்று உண்டு என்பதை நிலை நாட்டுகிறது. எனவே, கற்காலங்களுக்கு முன் எலும்புக் காலத்தில் மனிதன்—திருந்திய நிலையில் இல்லை என்றாலும்—வாழ்ந்து வந்தான் என்பது புலனாகிறது. ஆனால், அக்காலம் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அதற்கு முன் தோன்றி, சூழலுக்கும் கால நிலைக்கும் ஏற்ப மாறிய மனிதன் இன்று இந்த நிலையில் வாழ்கின்றான். இனி என்னாலானோ? யார் அறியார்!


  1. Johannesburg—(1958 Nov. 9. Indian Express)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/384&oldid=1359173" இலிருந்து மீள்விக்கப்பட்டது