பக்கம்:தமிழக வரலாறு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழக வரலாறு


விலங்குகளை வேட்டையாடி வாழும் வாழ்க்கையைத் தமிழ்ப் புலவர்கள் நன்கு பாடியுள்ளார்கள். ‘உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே’ என அக்குறிஞ்சிப் பொருள்களைப் பெருமிதம் தோன்றக் காட்டுகிறார் கபிலர். தினைப்புண வாழ்வும், சுனை விளையாட்டும், புள்ளோப்பலும், பிற மலை நிகழ்ச்சிகளும், குன்றக் குரவையும், வேலன் வெறியாடலும் அம் மலைவாழ் மக்களின் சமுதாய வாழ்வில் காணப்பெறும் தனிப்பெருஞ் சிறப்புக்களாய் அமைகின்றன.

இதைப் போன்றே முல்லை நிலத்து வாழும் கோவலர் ஆநிரை ஓம்பலும், காட்டில் பெறும் இயற்கைப் பொருள்களைத் துய்த்தலும், பசுவின் பாலையும் தயிரையும் நல் உணவாகக் கொள்ளுதலும், நாடி வரும விருந்தினருக்கு அவற்றைக் கொடுத்து உபசரித்தலும், கொல்லேறு தழுவித் தம் வல்லமைக் காட்டலும், மாலைப் பொழுதில் பிரிந்தவர் வாடலும். பிரிந்தவர் வாட்ட ந் தீர்க்கும் வகையில் ‘இன்னே வருகுவர் தாயர்’ என்று ஆன் கன்றை நோக்கி ஆய்ச்சியர் விரிச்சி கூறலும், முல்லைப் பண்வழி குழல் ஊதிக் கொடுங்கானத்தையும் தம் வசம் ஆக்கலுமாகிய நல்ல சமுதாய நெறியே அம்முல்லை நில வரலாறாக அமைகின்றதன்றோ!

மருதத் தண்பனை மனத்துக்கினியது ஆற்றங்கரை நாகரிகங்களையெல்லாம் மேலே குறிப்பாகக் கண்டோம். வயல் சார்ந்த ஊர் இடந்தொறும் மக்கள் கலந்து; ஒத்து அமைந்து வாழும் வாழ்க்கையும், நல்ல வேளாண் தொழில் புரிந்து, தாளாளராகி, தக்காங்குக் கொடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/52&oldid=1357268" இலிருந்து மீள்விக்கப்பட்டது