பக்கம்:தமிழக வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழக வரலாறு


வரலாற்றை வகுக்கப் பெரிதும் உதவுவது என்பதில் ஐயமில்லையன்றோ!

இந்நால்வகை நிலத்தொடு மேலே கண்ட பாலையும் ஒரு தனி நிலமாகப் பிற்காலத்தில் ஆக்கப் பெற்றது. அதிலே வாழும் மக்களது வாழ்வும் வளமுங்கூட வரலாற்றில் இடம் பெறுகின்றன. கொடுங்கோடையிலும் பாலைநில மக்கள் தம் வழிபடு கடவுளைப் பாட்டிசைத்துப் பரவிப் போற்றும் செயலும், அதன்வழி அவர்தம் சமுதாய வாழ்க்கை வரலாறும் நமக்குப் புலப்படுகின்றன. எனவே, இவ்வாறு பல்வேறு நிலப் பிரிவுகளும். அவற்றின் வழி அமைந்த இயற்கைப் பாகுபாடுகளும் வரலாற்றுத் துறைக்கு இன்றியமையாதன என்பது தேற்றம்.

மாறுபாடுகள் :

நிலப்பிரிவுகளே மக்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பனவாகும். அந்த நில அமைப்புக்கு ஏற்பவும், அதன் தன்மை வெம்மை மாறுபாடுகளுக்கு இயையவும் அதில் கிடைக்கும் உணவுக்கும் உடைக்கும் ஒப்பவுமே மனிதன் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். அந்த அமைப்பிலேதான் உலகம் தோன்றிய நாள் தொட்டு மனிதன் தன் வாழ்க்கை முறைகளை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டே வருகிறான். நில நடுக்கோட்டில் வாழும் ஒருவன், திறந்த உடலொடு கரிய மேனியைத் தாங்கி வாழ இயலும். அவனே தென்வட துருவ எல்லையில் அப்படி வாழ முடியுமா? மரக்கறி உணவினையன்றிப் பிறவற்றை மனத்தாலும் எண்ணாத ஒருவன், நிலக் கோடியில் கிடைக்கும் சில மாமிச உணவுப் பொருள்களை உண்டே வாழ வேண்டிய நிலை ஏற்படின் என்னாவன்? எனவே, மனிதனது சமுதாய வாழ்வும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/54&oldid=1357276" இலிருந்து மீள்விக்கப்பட்டது