பக்கம்:தமிழக வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழக வரலாறு


சிறந்தது என்று பேசப்பட்டது. அது திராவிட நாகரிகத்தின் சார்புடையதென்றும், அது தென்னாட்டு நாகரிகம் போன்றதென்றும் வரலாற்று ஆசிரியர் வரைந்துள்ளனர். எனினும், பரந்த பாரத நாட்டு வரலாற்றை எழுதிவரும் பெரியவர்கள் காவிரிக்கரை நாகரிகத்தைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம், இந்திய நாட்டு ஆட்சிப்பீடமாகிய தில்லியிலிருந்து நெடுந் தொலைவில் இது அமைந்துவிட்டமையேயாம். தில்லித் தலைமை நிலையத்திலிருந்து சிந்து வெளியைக் காணும் அத்துணை ஆர்வம் அந்நாளில் தமிழகத்தை அகழ்ந்து காண்பதில் இல்லை எனலாம். இன்றும் அந்நிலை மாறவில்லை. எனினும், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ்ந்தெடுத்த பொருள்களும். தமிழர்களது வரலாறு காண வேண்டும் என்ற அவாவும் ஓரளவு காவிரிக்கரை நாகரிகத்தையும் ஆராயத் தூண்டுகின்றன.

தமிழக வரலாற்றிள் தொன்மை :

மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழர் நாகரிகத்துடன் பாபிலோனிய, கிரேக்க, எகிப்திய நாகரிகங்களை இணைத்துப் பேசுகின்றார்கள். கிறித்தவ சகாத்தத்தின் தொடக்க நாளின் முன்னும் பின்னும் மேலை நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு வாணிபத்தின் பொருட்டும் பிற வகையிலும் வந்து சென்றவர்கள் எழுதி வைத்த குறிப்புக்கள் இந்நாடு பிற நாடுகளுடன் கொண்ட தொடர்புகளை அறியப் பெரிதும் பயன்படுகின்றன. வெற்று வாணிபத் தொடர்பு மட்டுமின்றி, அரசியல் தொடர்புகளுங்கூட எகிப்து முதலிய நாடுகளுடன் தமிழ் நாட்டுக்கு இருந்தன என்பது தெரிகிறது. சேர சோழ பாண்டியர் தமிழ்நாட்டு வேந்தர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/58&oldid=1357297" இலிருந்து மீள்விக்கப்பட்டது