பக்கம்:தமிழக வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழக வரலாறு


சிறக்க வாழ்ந்து, அரசோச்சி, தமிழ் நாட்டை உலகத்தார் அறிந்து கொள்ளுமாறு செய்தார்கள் எனலாம். இன்று தமிழ் நாட்டில் காணும் வானளாவிய கோபுரங்களோடு விளங்கும் பல கோயில்கள் இவர்கள் காலத்தில் தோன்றியவைகளே. தமிழ் நாட்டின் வரலாற்று மூலங்களில் சிறந்த கல்வெட்டுக்கள் பல அக்காலத்தில் தோன்றியவைகளே. அக்காலத்திலிருந்த இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில் இன்றும் கண்முன் காட்சியளித்து நிற்கின்றது. இராசராசன் மகன் இராசேந்திரன் கங்கையும் கடாரமும் கொண்டு ஜாவா வரை சென்று தமிழர்தம் வெற்றியை நிலைநாட்டிக் ‘கங்கை கொண்ட சோழன்’ ஆனான். இந்தக் காலமே, சங்க காலத்திலும் பலவகையில் ஏற்றமுற்ற காலம் எனலாம். இக்காலம் வரலாற்று எல்லையில் அமைந்து, முறைப்படி மக்கள் வாழ்வை உலகுக்குக் காட்டுகின்றது.

பிற்காலப் பாண்டியர் :

சிறந்த சோழப் பேரரசும் சரிந்தது. தாழ்ந்த பாண்டியர் தலை தூக்கினர். மேலைக் கடற்கரையில் வாழ்ந்த சேரர் பரம்பரையினரோ, வேறு வகையிலேயே வாழத் தொடங்கி விட்டனர் எனலாம். அவர்தம் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் பெரிதும் மாறி, ‘மலையாள இனம், தனி இனம்’ என்னும் வகையில் பெருக வழி உண்டாயிற்று. அவர்கள் மொழியும் தனி மொழியாகி நின்று வடமொழித் தொடர்பினை அதிகமாகக் கொண்டு பிரிந்து விட்டது. தென்கோடியில் தலை தூக்கிய பாண்டியர்களாலும் நெடுங்காலம் தங்கள் தமிழகத்தைக் காக்க இயலவில்லை. வடவிந்தியாவில் இத்துணைக் காலங்களிலும் ஏற்பட்ட எத்தனையோ மாறுதல்கள், அவ்வப்போது தமிழகத்திலேயும் சிற்சில மாறுதல்களைச் செய்து விட்டுத்தான் சென்றன. எனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/68&oldid=1357361" இலிருந்து மீள்விக்கப்பட்டது