பக்கம்:தமிழக வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாறு

67


பிற்காலப் பாண்டியர் ஆட்சி எல்லையில் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடநாட்டு இசுலாமியராட்சியின் வேகம் தமிழ் நாட்டில் தலைகாட்டலாயிற்று. மற்றோர் இருண்ட காலம் தமிழ் நாட்டின் வரலாற்றில் அமைந்த நிலை ஏற்பட்டு விட்டது. அல்லாவுதீன் கில்ஜி போன்றோர் தம் படைகள் தமிழ் மண்ணில் கால் வைத்தன. தமிழ் நாட்டுக்கு அதுவரை பழக்கமற்ற புதிய சமயமும் பண்பாடும் பிறவும் அக்காலத்தில் குடிபுகுந்தன. மேலைக் கடற்கரையில், அதற்கு முன்பே அரபிய நாடுகளின் வியாபாரத் தொடர்பால் இசுலாமிய சமயமும் அவர் தம் கலாசாரமும் பிறவும் பரவி நின்றன என்றாலும், அரசியல் ஆதிக்கத்தின் வழி இக்காலத்திலே தான் அச்சமயம் தமிழ் நாட்டில் அதிகமாக வேரூன்றலாயிற்று தமிழ் நாட்டுப் பண்டைய கலாசாரம், சமய நெறி, வாழ்க்கைமுறை முதலிய அனைத்தும் நிலை மாறலாயின.

பிற நாட்டார் ஆட்சி :

வடநாட்டு இசுலாமியராட்சியால் தம் இந்துப் பேரரசு குறைவதைக் கண்ட மராட்டிய வமிசச் சிவாஜியும், விசய நகரப் பெருவேந்தரும் தென்னாட்டை வட நாட்டு ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற விழைந்தனர்; தம் விழைவில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் எனலாம். விசயநகரப் பேரரசர் தமிழகத்தைக் கைப்பற்றிக் கொண்டு மறைய இருந்த பழந்தமிழ்ப் பண்பாட்டை ஓரளவு உயிர்ப்பித்து வாழ வைத்தனர் எனலாம். என்றாலும், விளக்கமுற்றிருந்த தமிழகம் இக்காலத்தில் ஒளி இழந்து இருண்ட கால வாழ்வையே நடத்திற்று என்பது பொருந்தும்.

விசயநகர அரசரும் மராட்டியரும் தமிழகத்தின் பகுதிகளை நன்கு ஆண்டனர். மதுரையில் நாயக்கர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/69&oldid=1357366" இலிருந்து மீள்விக்கப்பட்டது