பக்கம்:தமிழக வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI. வரலாற்றுக்கு முன் வடக்கும்
தெற்கும்

வரலாற்று ஆராய்ச்சி :

உலக வரலாறு எந்த நாளிலிருந்து தொடங்குகின்றது என்பது திட்டமாக வரையறுக்க முடியாத ஒன்று. சில நாட்டு வரலாறுகள் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்லும் வகையில் அமைந்தனவாயினும், அவை வரையறுத்துக் கூறும் அளவிற்கு அமையவில்லை என்பது தேற்றம். தமிழ் நாட்டைப் பற்றிய பழம்பெரும் பெருமைகளை யெல்லாம் நாம் பேசினாலுங் கூட, பன்னீராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரந்த தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தோம் என்று வீறுபெறக் கூறினுங் கூட, திட்டமாக அவற்றையெல்லாம் நம்மால் வரையறுக்கக் கூடவில்லை. எனினும், பிற நாடுகள் நாகரிக வாழ்வறியா நெடுங்காலத்துக்கு முன், தமிழ்நாட்டில் பண்பாடும் நாகரிகமும் நன்கு சிறந்து ஓங்கின என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்திய நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் கூறாது விடினுங்கூட உண்மை வரலாற்றை ஆராயும் மேலை நாட்டு அறிஞர்கள் தமிழர்தம் பண்டைய வரலாற்றைக் கூறாது விடார். இந்திய நாட்டு வரலாறு கங்கைக் கரையிலிருந்து தொடங்குவதைக் காட்டிலும் காவிரிக் கரையிலிருந்து தொடங்கப் பெறுவதே சாலச் சிறப்புடைத்து என்பது தெளிந்த வரலாற்று ஆசிரியர்கள் கூறும் உண்மையாகும். எனவே, வடநாடு தன் வரலாற்று எல்லையை வரையறுக்கு முன், தமிழ் நாட்டு வரலாறு ஒழுங்குபட அமைந்து விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/96&oldid=1357655" இலிருந்து மீள்விக்கப்பட்டது