பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம் போல"

என்ற ஐயூர் முடவனார் பாட்டையும், சான்றுகளாகக் காட்டியுள்ளார்.

கோசர் வாழும் நியமம் என்ற ஊர், செல்லூர்க்குக் கிழக்கே உளது. அக் கோசர் போரில் பட்ட வீரப்புண்களால் ஆன வடுக்கள் நிறை முகத்தினர். அச்செல்லூர்க்கு அருகே, இளங்கோசர் பலர் ஒன்று கூடி இருந்து, கட லாடு மகளிர் கொய்து தந்த புலிநகக் கொன்றை மலரையும், கழனி உழவர் பறித்துப் போட்ட குவளை மலரையும் காவற்காட்டில்மலர்ந்த முல்லை மலரோடு கலந்து கட்டிய கண்ணி அணிந்து விளையாடுவர் அச்செல்லூர், ஆதன் எழினி என்பானுக்கு உரியது. அவன் களிற்றின் மீது வேல் எறியும் வீரம் மிக்கோன் அவன் எறியும் வேல் ஏற்ற களிறுகள், கடுந்துயர் உறும். என்ற இவையே, இவ்விரு பாடல்களும் அறிவிக்கும் செய்திகளாம்

இப்பாக்களில் இடம்பெற்றிருக்கும் ஊர்கள், நியமமும் செல்லுறாமே அல்லது, வாட்டாறு அன்று; இப்பாக்களின் பாட்டுடைத் தலைவன், ஆதன் எழினியே அல்லது, எழினி ஆதன் அல்லன். இந்த வேறுபாடுகளையும், திருவாளர். பிள்ளை அவர்கள் உணரவில்லை போலும்.

அங்ஙனமாயின், வாட்டாற்று எழினி ஆதன் என்பான் ஒருவன் இல்லவே இல்லையா? கோசர்க்கும், அவனுக்கும் தொடர்பு இல்லவே இல்லையா? என்றால் இரு கேள்விகளுக்கும் ஒருசேர இருந்தனன்; இருந்தது, என்ற விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மாங்குடி கிழார் என்ற புலவர், வாட்டாற்று எழினி ஆதனைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பாராட்டியுளளார். அப்பாடல் இதோ :

127