பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலபார் நாயர், கொண்கான நாட்டவர், காஞ்சி நாட்டவர் பூனாவை அடுத்து இருந்தவர் என்றெல்லாம் கூறி வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் குழம்பியுள்ளனர், குழப்பியுள்ளனரே அல்லது கோசர் யார் என்ற தெளிவான முடிவுக்கு ஒருவரும் வந்தவர் அல்லர் எப்போது வருவாரோ அறியேம்.

கோசர் முடிவும் அத்தகையதே, அன்னி மிஞிலியின் தந்தையின் கண்களை அவித்தமையால் அழுந்தூர்த் திதியனால் அழிவுண்ட பின்னர், ஊர் முது கோசர், வரலாற்றிலிருந்து மறைந்தே போயினர்.

கொங்கில் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபாடாற்றிய பின்னர், இளங்கோசர்களும் வரலாற்றில் இல்லாமலே போய் விட்டனர்.

கோசர் தலைவன் பழையன் மாறனும், அறுகை காரணமாகச் செங்குட்டுவனால் வெற்றி கொண்ட பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்தே போனான்.

ஆக தமிழக வரலாற்றில் பெரியதோர் இடம் பெற்றிருந்த எண்ணிலாப் புலவர்களின் எண்ணிலாப்பாடல்களில் இடம் பெற்று பெரிய தொரு அரசியல் சூறாவளியையே சுழலவிட்ட கோசர்களின் தோற்றமும் தெளிவாக இல்லை ஒடுக்கமும் தெளிவாக இல்லை, ஆதி அந்தம் அறியாப் பெருநிலையினராகி விட்டனர் கோசர்.

163