“என் தமிழ்ப் பணி” என்ற தலைப்பில் புலவர் அவர்கள் எழுதிய கட்டுரையில், “என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துஉள்ளேன். கல்வி கரையில, கற்பவர் நாள் சில காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி தொடரும்” என்று தம் தமிழ்ப்பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால் காலம் இடம் தரத் தவறிவிட்டதனால் முற்றுப் பெறாத நிலையிலேயே அவருடைய எழுத்துப்பணி எச்சமாகவே நின்று போயிற்று காலம் செய்த கொடுமை அது.
தமிழால் உயர்ந்து, தம்தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும் உயர்வு தேடித்தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள் “செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல்” போல தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார்.
அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று அதன் முதற் கட்டமாக, வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி, மனையுறை புறாக்கள் ஆகிய இரு நூல்களை சென்ற ஆண்டு வெளியிட்டோம். சங்க கால அரசர் வரிசை, திருமாவளவன், அறம் உரைத்த அரசர். இலக்கியங் கண்ட காவலர், கலிங்கம் கண்ட காவலர், தமிழர் தளபதிகள், கழுமலப் போர். தமிழர் வாழ்வு, தமிழர் வாணிகம் பண்டைத் தமிழர் போர் நெறி, தமிழகத்தில் கோசர்கள், போன்ற வரலாற்று நூற்கள் பல படைத்த புலவர் அவர்கள், சங்க காலம் தொட்டு இன்றுவரையான தமிழக வரலாற்றை காலம்தோறும் தொகுத்து வரிசையாக எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
iv