பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளுத்துங்கள் குதிகாலை! விட்டுவிட்டு வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை; என ஆணையிட்டு ஆர்ப்பரித்த இழிமகன் தேசிங்கை அவன் தமிழர்க்கு இழைத்த இன்னலை எடுத்துரைக்கும் ஏடு இது. அக்கொடியவனே திகைத்து நடுங்கிட மூச்சை அடக்கி நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டத் தமிழச்சியின் மானம் பேசும் காப்பியம்; தமிழ் மக்களைத் திகைப்பில் ஆழ்த்தித் திருத்தும் காப்பியம். இது கவிஞர் எழுதிய தமிழச்சியின் கத்தி எனும் காப்பியத்தின் இரண்டாம் பகுதி என்று அவரே முன்னுரையில் மொழிகின்றார்; முதற்பகுதி கிடைத்தால் எழுச்சியின் முகடே காணலாம்; கிடைக்குமா என்ற ஏக்கம் பிறக்கின்றது. 1949இல் முதற்பதிப்பாக வெளிவந்த இக்காப்பியம் பல பதிப்புகளைக் கண்டதாகும். அதன் பழைய ஏடு ஒன்றைத் தந்து உதவிய கவிஞர் எழிலரசு அவர்கட்கு எங்கள் உளம் கனிந்த நன்றி. புரட்சிக்கவிஞரின் எழுச்சி எண்ணங்களைக் காலத்தின் தேவை கருதி நாட்டுடைமையாக்கிய தமிழ் உள்ளங்கட்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, தமிழர் உணர்வில் கலந்து உய்விக்கும் ஏட்டை அளிப்பதில் பெருமகிழ் வடைகின்றோம். டாக்டர் ப.ஆறுமுகம்

பதிப்பாசிரியர்

4