பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 17 செட்டிநாட்டு அரசர் வகுப்புவாதக் கருத்துடன் இக்காரியத்திற்கு உதவி செய்யவில்லை; அரசியற் கருத்துடனும் இம்முயற்சிக்குத் துணை செய்யவில்லை. செட்டிநாட்டு அரசரை நன்றாக உணர்ந்தவர்கள், அவரால் அதிக உதவி பெற்று வருகிறவர்கள் எந்த வகுப்பினர் என்பதை அறிவார்கள். அவர் எந்த அரசியல் கட்சியிலும் கலந்து கொள்ளவில்லை; அரசியலை விட்டு விலகியே இருக்கிறார். ஆதலால் தமிழிசையை வளர்க்க வேண்டும் என்னும் அவருடைய நோக்கத்திற்கு, வகுப்பு வெறுப்பையோ, அரசியலையோ காரணமாகக் கூற முடியாது. தமிழ்க் கலை விரோதிகள் தமிழர்கள் தமிழ்ப்பாடல்கள் வேண்டுமென்று கேட்பது பிறமொழியின்மீது வெறுப்பாகுமா? தமிழில் நல்ல பாடல்கள் இயற்ற முயல்வது பிறமொழிக்குச் செய்யும் கெடுதியாகுமா? தமிழ்க்கலையை வளர்ப்பதற்குத் தமிழர்களும், தமிழன்பர்களும் செய்யும் முயற்சிக்குக் கூடவா தடை விளைவிக்க வேண்டும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களைத் தமிழ்ப் பகைவர்கள், தமிழ்க் கலை விரோதிகள், தமிழரின் எதிரிகள்' என்று கூறத் தொடங்கினால், அதை இல்லை என்று கூற முடியுமா? முஸ்லிம்கள் தங்கள் கலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறவில்லையா? அவைகளின் தனித் தன்மையை அழியாமற் காப்பாற்றவேண்டும் என்பதையும் ஒரு காரணமாகக் காட்டித்தானே அரசியலிலும் பாதுகாப்புக் கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கலைகளையும் அவற்றின் கருத்துக்களையும் காப்பாற்ற முயல்வதை, யாரேனும் குற்றமென்று கூறமுடியுமா? தடுக்க முடியுமா? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு மாத்திரம் ஏன் முட்டுக்கட்டை போடவேண்டும்? ஏன் வகுப்புவாதம் கற்பிக்க வேண்டும்?